தஞ்சையில் திமுக நிர்வாகி அஞ்சகம் பூபதி இல்ல திருமண விழாவில் ஸ்டாலின் பங்கேற்றார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, தமிழகத்தில் தற்போது செயல்படாத அரசு உள்ளது. நொடிப்பொழுதில் கூட ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பு உண்டு. ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர், அரசு மீது நம்பிக்கையில்லை எனக்கூறி ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ள நிலையிலும் பெரும்பான்மை பலம் இல்லாமல் ஆட்சி தொடருகிறது. முதல்வர் கூட்டிய கூட்டத்திலும் பெரும்பான்மைக்குத் தேவையான சட்டமன்ற உறுப்பினர்கள கலந்து கொள்ளவில்லை தமிழக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி திமுக சார்பிலும், ஆளுநரிடம் கடிதம் அளித்திருந்தோம். மேலும் குடிஅரசு தலைவரைச் சந்தித்து மனு அளித்தோம். ஆனால் ஒரு நடவடிக்கையும் இல்லை. வரும் 10 அன்று திமுக, காங்கிரஸ் சார்பில் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். அப்போது சட்டமன்றத்தைக் கூட்டுங்கள். பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுங்கள் என கோரிக்கை விடுப்போம். அப்போதும் ஆளுநர் இழுபறி செய்தால், இதற்கு குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்வோம். அதற்குள் அவர் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், ஆட்சியை கவிழ்க்கும் வகையில் போராடுவோம். ஆட்சியை கவிழ்க்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. சட்ட ரீதியாகவும், மக்களை திரட்டியும் போராடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



