10,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் முதல்நிலை பெண் காவலராக இருப்பவர் நந்தினி. இவர் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள நீல்கிரீஸ் பல்பொருள் அங்காடிக்கு நேற்று சென்றார். அங்கு பேசியில் பேசிக்கொண்டே சிறு சிறு பொருட்களை எடுத்து சட்டைப் பையில் போட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்து திடுக்கிட்ட கடை ஊழியர்கள் அவரை அழைத்து எடுத்த பொருட்களை திரும்பத் தருமாறு கேட்டுள்ளனர். நந்தினி தன் காவல் அதிகாரத்தை காட்டி திருப்பித் தரவேண்டியதில்லை என்று மறுத்திருக்கிறார். கடையில் இருந்த அனைத்து ஊழியர்களுமாகச் சேர்ந்து நந்தினியிடமிருந்து அவர் எடுத்தப் பொருட்களை மீட்டிருக்கின்றனர். தன் அதிகாரம் செல்லுபடியாக மனஉளைச்சலில் நந்தினி இது குறித்து தனது கணவர் தினேஷிடம் கூற, அவர் உடன் இரண்டு நண்பர்களை அழைத்துச் சென்று பல்பொருள் அங்காடியில் நந்தினியைக் கையும் களவுமாகப் பிடித்த ஊழியரை மிரட்டியுள்ளார். அதற்கு அந்த ஊழியர், ஐயா அதுதான் என் வேலை. யாராக இருந்தாலும் திருடுவது தவறு, என்று பேச்சு வளர, என்னடா உனக்கு அவ்வளவு தைரியமா? காவலரையே பிடிப்பாயா நீ? என்று கோபமான தினேஷ் ஊழியரின் முகத்தில் குத்தி அவரைக் கீழே வீழ்த்தியுள்ளார். பின்னர் தடுக்க வந்த மற்ற ஊழியர்களையும் தினேசும் அவரது நண்பர்களும் தாக்கியுள்ளனர். இதுகுறித்து நீல்கிரீஸ் உரிமையாளர் ப்ரணவ் அளித்த புகாரின் பேரில் உடனடியாக பெண் போலீஸ் நந்தினியின் கணவர் தினேசை காவல்துறையினர் கைது செய்தனர். தினேஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவர் மீது 341, 323, 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பெண் காவலர் ஒருவர் பல்பொருள் அங்காடி மீது தனது அதிகாரத்தை பயன்படுத்தியது, கணவர் மற்றும் அடியாட்களை அனுப்பித் தாக்கிய விவகாரம் மற்றும் கைது செய்யப்பட்டது, காவல் ஆணையர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் பெண் காவலர் நந்தினியை தற்காலிக நீக்கம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,860.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



