Show all

கஜா புயலில் பாதித்த தனது வாடிக்கையாளர்களின் முழுக்கடன் தள்ளுபடி செய்த தேநீர் கடைக்காரர்! நடுவண், மாநில அரசுகள்?

06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வம்பன் நான்கு சாலை பகுதியில் தேநீர் கடை நடத்தி வருகிறார் அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார். இவர், 'கஜா' புயலின் கோர தாண்டத்தில் நிலை குலைந்து நின்ற மக்களுக்கு இலவசமாக தேநீர் விநியோகித்துள்ளார். புயல் பாதிப்புகளால் வேளாண்மையை இழந்ததோடு கூலி வேலைகூட கிடைக்காமல் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு நிவாரண தொகையை இதுவரை வழங்கவில்லை. மேலும், மக்களால் வலியுறுத்தப்பட்டு வரும் முதன்மைக் கோரிக்கையான கடன் தள்ளுபடியையும் நடுவண், மாநில அரசுகள் நிறைவேற்றவில்லை. தங்களது வறுமையைப் பற்றி அன்றாடம் தனது தேநீர் கடையில் புலம்பியதைத் தொடர்ந்து தன்னால் இயன்ற உதவியை இவர்களுக்கு செய்ய வேண்டுமென கருதிய சிவக்குமார், முந்தா நாள் வரை தேநீர் குடித்த, வடை சாப்பிட்ட வகையில் ஏற்பட்ட கடன்களை வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி செய்தார்.

இதற்கான அறிவிப்பு பதாகையையும் கடை வாசலில் தொங்கவிட்டுள்ளார். இது வாடிக்கையாளர்கள் நடுவே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும்கூட ஏழை, எளிய மக்களைப் பற்றி ஒரு சாதாரண மனிதரால் உணர்ந்ததைக்கூட அரசாங்கம் உணரவில்லையே என்பதுதான் பரபரப்பான பேச்சாக உள்ளது.

இது குறித்து சிவக்குமார் கூறியது: இப்பகுதியானது மலர், காய்கறி போன்ற சிறு வேளாண்மையையும் தரிசு நிலங்களில் வானம் பார்த்த வேளாண்மையாக கடலை, எள் போன்ற பயிர்களை மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது.

உழவு, கட்டுமானப் பணி போன்ற அன்றாட கூலி வேலை செய்தும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். புயலுக்கு பிறகு இவர்களது வாழ்க்கையானது தடம் மாறியதால் பரிதவித்து வருகின்றனர். ஒரு வேளை தேநீர் குடிப்பதற்குக்கூட யோசிக்க வேண்டிய நிலைக்கு அவரவர் வீடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

இங்கு வந்து ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் புலம்புவதை காதுகொடுத்தே கேட்க முடியவில்லை. கண்ணீர் சிந்தாத நாளே இல்லை. வேளாண் கடன், சுய உதவிக்குழுக் கடன் என ஒவ்வொருவரும் குறைந்த தொகையையே கடன் பெற்றிருந்தாலும்கூட அதை செலுத்த முடியவில்லை. இதை அரசு தள்ளுபடி செய்யும் என எதிர்பார்த்துவரும் நிலையில் இதுவரை அதற்கான எந்த அறிவிப்பும் நடுவண், மாநில அரசுகளிடம் இருந்து வரவில்லை. 

அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண கொதையைக்கூட அரசு கொடுக்கவில்லை. புயலுக்கு அடுத்த நாள் இலவசமாக தேநீர் போட்டுக்கொடுத்தேன். மேலும், வாடிக்கையாளர்கள் பெற்றிருந்த கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்துள்ளேன். அது, ஒவ்வொருத்தருக்கும் சொற்ப ரூபாய்தான் என்றாலும்கூட அதுவே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்னால் முடிந்ததை இம்மக்களுக்கு செய்துள்ளேன் என்றார்.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,008.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.