06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் போராட்டத்தில் குதித்த தூத்துக்குடி கல்லூரி மாணவர்களை உடனடியாக காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்று விட்டனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தூத்துக்குடி மாணவர்கள் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், வந்து அமர்ந்து ஒரு நிமிடம் கூட அவர்களை போராட்டக்களத்தில் நிற்க விடாமல், வந்த உடனேயே வலுக்கட்டாயமாக அம்மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். சிந்தாதிரிப்பேட்டையில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டனர். கும்பகோணத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள், இன்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி ஸ்டெர்லைட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சென்னையிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டத்தில் குதிப்போர் உடனுக்குடன் அகற்றப்படுவது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,008.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



