ஆளும் அதிமுக, பாஜக மீது கோபம் இருப்பவர்கள் தயவுகூர்ந்து உங்கள் கோபத்தை வாக்களிப்பில் காட்டுங்கள்; வன்முறையில் வேண்டாம் அது தமிழினத்திற்கே இழுக்கு. 18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அடுத்தடுத்து ஆளும் கட்சியின் மீது தமிழக மக்களின் கோபத்தின் வெளிப்பாடு அச்சத்தை ஊட்டுவதாக இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற இரு மோசமான சம்பவங்கள் தமிழக மக்களுக்கு களங்கம் கற்பிக்கக் கூடும். நேற்று இரவு தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மன்னார்குடி, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பேராவூரணி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி கருத்துப்பரப்புதலில் ஈடுபட்டிருந்தார். இரவு 9 மணியளவில் ஒரத்தநாட்டில் கருத்துப் பரப்புதலில் ஈடுபட்டபோது எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு செருப்பு எடப்பாடியின் மீது தாக்க வில்லை என்றாலும் வேட்பாளரைத் தாக்கியது பரபரப்பானது. செருப்பு வீசிய நபரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். இந்த நிலையில், ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் மீது பெரியப்பட்டினம் பகுதியில் சீசா வீசப்பட்டுள்ளது. திருப்புல்லாணி ஒன்றிய அதிமுக நிர்வாகி உடையத்தேவர் மீது சீசா பட்டு அவர் காயமடைந்துள்ளார். 24 மணி நேரம் கூட ஆகவில்லை. இப்படி இருவேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. தேர்தலுக்கு இன்னும் சுமார் 2 கிழமைகளுக்கு மேல் இருக்கும் சூழ்நிலையில் இப்படி அதிர்ச்சியான சம்பவங்கள் மனதுக்கு வருத்தம் அளிப்பதாக இருக்கிறது. ஆளும் அதிமுக, பாஜக மீது கோபம் இருப்பவர்கள் தயவுகூர்ந்து உங்கள் கோபத்தை வாக்களிப்பில் காட்டுங்கள் ; வன்முறையில் வேண்டாம் அது தமிழினத்திற்கே இழுக்கு. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,109.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.