Show all

எஸ்.வி.சேகருக்கான அடைக்கலம் இனியும் தொடருமா! அவரின், முன்பிணை மனு தள்ளுபடி

27,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: பெண் இதழியலாளர்களை இழிவுபடுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டது தொடர்பான வழக்கில் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் பதிகை செய்த முன்பிணை மனுவை சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் தள்ளுபடி செய்தது.

இதழியலாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக் கொடுத்தது சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் பெண் இதழியலாளர்களை மிகவும் இழிவுபடுத்தி ஒரு பதிவை தமது சமூக வலைதளத்தில் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார்.

இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இப்பதிவு தொடர்பாக எஸ்.வி.சேகர் மீது காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. சென்னை காவல்துறையினரும் பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து எஸ்.வி.சேகர் தலைமறைவானார். அத்துடன் முன்பிணை கோரி சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு பதிகை செய்தார்.

இம்மனுவை விசாரித்த சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் எஸ்.வி.சேகருக்கு பிணை வழங்கவில்லை. அத்துடன் அவரை கைது செய்யவும் தடை விதிக்கவில்லை. ஆனாலும் சென்னை காவல்துறையினர் எஸ்.வி.சேகரை கைது செய்யவில்லை.

இதனிடையே எஸ்.வி.சேகரின் பிணை மனு மீது மீண்டும் விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது எஸ்.வி. சேகரின் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் எந்த நேரத்திலும் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் எஸ்.வி. சேகருக்கு அவரது உறவினரும் தலைமைச் செயலாளருமான கிரிஜா வைத்தியநாதன் அடைக்கலம் கொடுத்திருக்கலாம் என்று நம்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,783.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.