27,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: 'சல்லிக்கட்டு வேண்டும்' என ஒட்டு மொத்த தமிழகமும் வரலாறு காணாத வகையில் போராடி பாஜக நடுவண் அரசில் முதல் வெற்றியை ஈட்டியது. இரண்டாவது வெற்றிக்காண வெளிச்சக் கீற்றாக, நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தில் இருந்து நடுவண் அரசோடு ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனம் பின்வாங்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடுவண் அரசு இந்திய எரிவாயுக் கழகத்திடம் பொறுப்பு வழங்கியது. நடுவண் அரசின் இந்த முடிவுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த கடந்த ஆண்டில், ஜெம் லெபாரட்டரிஸ் நிறுவனத்துடன் நடுவண் அரசு ஒப்பந்தம் செய்தது. புதுக்கோட்டையிலுள்ள கிராம மக்கள் நெடுவாசலில் சுமார் 100 நாள்கள் போராட்டத்தை மேற்கொண்டனர். மக்கள் எதிர்ப்பின் காரணமாக தமிழக அரசு, ஜெம் நிறுவனத்துக்கு குத்தகையை மாற்றித் தரவில்லை. ஜெம் நிறுவனம் 10 கடிதங்கள், நடுவண் அரசு 3 கடிதங்கள் எழுதியும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு இந்திய எரிவாயுக் கழகத்திற்கு அளிக்கப்பட்டிருந்த குத்தகையை ஜெம் நிறுவனத்துக்கு தமிழக அரசு மாற்றித் தரவில்லை. இந்தநிலையில், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேறு இடம் ஒதுக்கித் தரக்கோரி ஜெம் நிறுவனம் நடுவண் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், 'ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதியளிக்கும் என்ற நம்பிக்கை இல்லை. திட்டம் தொடங்க தாமதம் ஆவதால் பெரும் இழப்பு ஏற்படுகிறது. எனவே, ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேறு இடம் ஒதுக்கித் தரவேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளது. ஏற்கெனவே அத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையிலுள்ள தேசிய தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் நடிகர் விசால் வழக்கு தொடர்ந்தார். தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் நடிகர் விசால் நடத்தி வரும் தேவி அறக்கட்டளை பதிகை செய்த மனு ஏற்கப்பட்டதோடு, நடுவண், மாநில அரசுகளுக்கு கவனஅறிக்கை அனுப்ப தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த நிலையில், ஹைட்ரோகார்பன் திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற அனுமதிக்குமாறு ஜெம் நிறுவனம், நடுவண் பெட்ரோலிய அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதால், நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஜெம் லேப்ஸ் நிறுவனம் கைவிட உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. இந்த திட்டத்தை நிறுத்த போராடிய எல்லோருக்கும் வாழ்த்துக்கள். ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவன் என்ற முறையில், தான் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாக விசால் தெரிவித்துள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,783.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



