Show all

தமிழகமே மக்கள் கடலாய் ஆர்பரித்தது! நீண்டகாலத்திற்கு பின்பு தமிழகம், போராட்ட முழக்கங்களால் ஆடிப்போனது

22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எதிர்க்கட்சிகளின் சார்பில் இன்று முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.  

தி.மு.க தலைமையிலான முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதேபோல், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவும் ஆதரவு அளித்துள்ளார். மாநிலம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

கோவை நகரில் 16 இடங்களில், தி.மு.க மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டனர். அதேபோல, வழக்கறிஞர்கள் தொடர்ந்து 3-வது நாளாக அறங்கூற்றுமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மேலும், மாணவர் அமைப்பினரும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். நாம் தமிழர் கட்சி சார்பில், கணியூர் டோல்கோட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 1 மணி நேரமும் அந்தப் பகுதியில் போக்குவரத்து நின்றுபோனது. சுங்கச்சாவடியில் எந்த வாகனமும் கட்டணம் செலுத்தவில்லை. இதனிடையே, பாதுகாப்பு கருதி கோவையில் இருந்து கர்நாடகாவுக்கு இன்று பேருந்துகள் இயக்கப்படவில்லை. மற்ற பேருந்துகளும் வழக்கத்தைவிடச் சற்று குறைவாகவே இயக்கப்படுகின்றன.  காளபட்டி, நேரு நகர் மற்றும் சரவணம்பட்டியில், பேருந்துகள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது.

சேலத்தில் சேலம் சந்திப்பு, கொண்டலாம்பட்டி, மகுடஞ்சாவடி, தாரமங்கலம் போன்ற பல்வேறு இடங்களில் சாலை மறியல், தொடர்வண்டி மறியல் போராட்டங்கள்  நடைப்பெற்றன. சேலம் மாவட்டம் முழுவதும் 95 விழுக்காடு வர்த்தக நிறுவனங்கள், உணவு விடுதிகள், பேருந்துகள் இயக்கப்படாமல் முழு கடையடைப்பு இருபதால் சேலத்தின் பிரதான சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன.

தி.மு.க., தலைமையில் அதன் தோழமை கட்சிகள்  சுமார் 2000க்கும் மேற்பட்டவர்கள் சேலம் சந்திப்பில் கூடினார்கள். காவல்துறையினர் தடுப்புகளை கொடுத்துத் தடுத்தார்கள். தடுப்புகளைத் தூக்கி எறிந்து விட்டு காவல்துறையினர் சிலர் தவறி கீழே விழ அவர்களை மிதித்துக் கொண்டே போராட்டக்காரர்கள் ஆவேசமாக ஓடினார்கள். தொடர்வண்டி மேற்கூரை மீது ஏறி முழககங்கள் எழுப்பினார்கள். மோடியின் உருவ பொம்மையை எடுத்துவந்து தீயிட்டுக் கொளுத்தி, செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்து ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்தனர். 

திருவள்ளூர், ஆவடி, திருநின்றவூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் பேருந்து நிலையம் மற்றும் தொடர்வண்டி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டன.

ஆவடி தொடர்வண்டி நிலையம் அருகே சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற மின்சார தொடர்வண்டி மக்கள் அதிகாரம் அமைப்பினர்  தண்டவாளத்தில்படுத்து முற்றுகையிட்டனர். ஒரே நேரத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளும் தொடர்வண்டி மறியலில் ஈடுபட்டதால் ஆவடி ரயில் நிலையம் ஸ்தம்பித்தது.

திருச்சியில் பல்வேறு இடங்களில் காவிரிக்காக போராட்டம் நடந்து வருகிறது. இன்று காலை திருச்சி அஞ்சல் நிலையம் முன்பாக தி.மு.க, ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு ஏரி ஆறு பாசன விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தொண்டர்கள் திரண்டு வந்தனர்.

முன்னாள் அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் சங்க  தலைவர் அய்யாக்கண்ணு, பூ. விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  

அப்போது தி.மு.கவினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசைக் கண்டித்து தலைமை அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டதுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அடுத்து அருகில் உள்ள காந்தி சிலையைச் சுற்றியுள்ள ரவுண்டானாவைச் சுற்றி சாலையில் அமர்ந்து மறியலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஈடுபட்டனர். இதனால்  வாகனங்கள் சாலையில் போக முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அந்தவழியே வந்த அரசு பேருந்து மீது போராட்டக்காரர்கள் ஏறி அமர்ந்துகொண்டு நடுவண் மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். மேலும் விவசாய அமைப்பினர் சாலையில் படுத்து மண்பானையை வயிற்றில் வைத்து தண்ணீர் கேட்டுப் போராடினர்.

இதனிடையே அங்கிருந்த மனித நேய மக்கள் கட்சியினர் மத்தியில் ஆளும் பி.ஜே.பியின் கொடியை எரிக்க முயன்றபோது, அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் மயில்வாகனன் அதனைத் தடுத்து போராட்டக்காரர்களைக் கைது செய்ய உத்தரவிட்டார். அதனையடுத்து போராட்டக்காரர்கள் கைது 

வேலூரில் ஏழு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் அஞ்சலகத்தினை பூட்டி, ஹிந்தி எழுத்துக்களில் மை பூசி அழித்து தமிழர் நல பேரியக்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி தமிழர் தேசிய கட்சியைச் சேர்ந்த ஏழு பேர் தொண்டியிலும், தி.மு.கவைச் சேர்ந்த ஒருவர் ஆர்.எஸ்.மங்கலத்திலும் செல்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார்கள் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

திண்டுக்கல்லில் இன்று காலையில் பேருந்துகள் இயங்கி வந்தன. இந்நிலையில் பேருந்து நிலையம் அருகே அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. தொடர்ந்து சீலப்பாடி பைபாஸ், தோமையார்புரம் உள்ளிட்ட பலபகுதிகளில் பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

நகரில் 10 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைத்து நொறுக்கப்பட்டன. இதனால் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. பேருந்துகளின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டது. திண்டுக்கல் - பழநி சாலையில் மறியலில் ஈடுபட்ட திமுக துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, லியோனி, பழநி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் உள்ளிட்ட 700 பேர் கைது செய்யப்பட்டனர்.

நத்தம் பகுதியில் மறியலில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம், ஒட்டன்சத்திரம் பகுதியில் மறியல் செய்த சட்டமன்ற திமுக கொறடா சக்கரபாணி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்திக் கடை அடைப்பு, பேருந்து மறியல், தொடர்வண்டி மறியல் எனப் பல போராட்டங்கள் நடைபெற்றன. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் வாசுகி தலைமையில் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடைபெற்றது.

நெல்லையில் இன்று தொடர்வண்டி மறியல் போராட்டம் நடைபெற்றது. தி.மு.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம்லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ., ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றன.

தி.மு.க-வின் நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள், தொடர்வண்டி நிலையத்தினுள் செல்ல முடியாதபடி காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ஆனால் தடுப்புக் கம்பிகளைத் தாண்டி போராட்டக்காரர்கள் தொடர்வண்டி நிலையத்தினுள் நுழைந்து தண்டவாளத்தில் அமர்ந்தனர். அப்போது தொடர்வண்டி நிலையத்துக்குள் ரயில் எதுவும் வராத நிலையில், அங்கு நின்றுகொண்டிருந்த இன்ஜின் மீது ஏறி மறியல் செய்தனர். இது தொடர்பாக 500-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இந்தப் போரட்டம் ஓயாது என்கிற உணர்வுகளை போராட்ட முழக்கங்களில் காணமுடிகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,748.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.