Show all

நேர்மையான நடுவண் அரசு இல்லாத குறைதான்! தோண்டும் இடங்களிலெல்லாம் தமிழர் வரலாற்றைப் பறைசாற்றும் சான்றுகள்

28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருப்பூர்- ஈரோடு மாவட்ட எல்லையில், நொய்யல் நதிக்கரையில், கொடுமணல் கிராமம் அமைந்துள்ளது. கடந்த 37 ஆண்டுகளாக தஞ்சை தமிழ் பல்கலை, தமிழக தொல்லியல் துறை, புதுச்சேரி தொல்லியல் துறையினர் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பழங்கால மனிதர்களின் வாழ்வியல், கல்வி, கலை, தொழில்நுட்பம், கல்மணிகள் உற்பத்தி பல்வேறு நாடுகளுக்கு வணிகம் என, 2,500 ஆண்டுகள் பழமையான நகருக்கான ஏராளமான தொல்லியல் சான்றுகள், இங்கு கிடைத்து வருகின்றன.

இந்நிலையில், நடுவண் தொல்லியல் துறை, பெங்களூரு அகழாய்வு பிரிவு மூலம், ஐந்து மாதங்களுக்கு முன்பு அகழாய்வு பணியைத் தொடக்கியது. இதில், ஆயிரக்கணக்கான தொல்பொருட்களும், தமிழ் எழுத்துக்கள் பொறித்த பானை ஓடு, சுடுமண் முத்திரை, தச்சரின் துளை ஊசி மற்றும் 300க்கும் மேற்பட்ட பழந்தமிழ் எழுத்துக்கள் பொறித்த பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர்,  இராமன் கூறியதாவது: இதுவரை நடந்த ஆய்வுகளின் படி, கொடுமணல், ஒரு சிறந்த தொழில் நகரமாக இருந்திருக்கிறது. உற்பத்தி செய்த பொருட்கள், அந்த காலத்திலிருந்த வணிக வலைத்தொடர்பு மூலம், இந்தியாவில் பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

மற்ற பகுதிகளில் தயாரிக்கப்பட்ட பொருட்களும், கொடுமணலுக்கு வந்திருக்க வாய்ப்புள்ளது. கீழ் மட்டத்தில் ஒரு பந்தக்கால் நடுகுழிகளோடு கூடிய ஒரு சதுர வடிவிலான வீடு, தொழிற்கூடம் கண்டறியப்பட்டது.

இப்பகுதியில் அதிகளவு வெண் கற்களும், மணிகளை பட்டை தீட்டுவதற்கான கல்லும் கிடைத்ததால், மணிகள் தயாரிப்பு தொழிற்கூடம் இருந்திருக்கும் வாய்ப்புள்ளது. ஒரு சிறிய சிவப்பு நிற பானை ஓட்டின் மீது, அ, ஆ, இ, ஈ என்று, தமிழ் மொழியின் நான்கு உயிர் எழுத்துக்கள் பழந்தமிழ் வரி வடிவத்தில் எழுத்தப்பட்டுள்ளன. 

தற்போதைய அகழாய்வில், இரும்பால் ஆன,  203 தொல் பொருட்களும், 45 செம்பினால் உருவாக்கப்பட்டதும், ஆறு தங்கத்தினால் ஆன பொருட்களும், 144 தந்தம், எலும்பினால் ஆனதும், 84 தொல் பொருட்கள் சுடு மண்ணாலும், 391 மணிகளும், அவற்றுள் 71 சுடுமண் மணிகளும், 51 சூதுபவளம், 11 செவ்வந்திக்கல், 61 கண்ணாடி பொருட்கள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,784.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.