28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மேற்கத்திய அசத்தல் கதைத்தலைவர்கள் படங்களில், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது இரும்பு மனிதன் (அயன்மேன்). இந்தப் படத்துக்காக தனித்துவமாக வடிவமைக்கப் பட்ட இரும்புமனிதன் உடை குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் மிகவும் பிடித்து போனது. அந்த உடையை அணிந்து இரும்புமனிதனாக் ராபர்ட் டோவ்னி இளவல் நடித்து இருந்தார். ஜோன் பேவ்ரியூ இயக்கினார். பத்தாண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தப் படம் வசூலில் சாதனை படைத்தது. தொடர்ந்து இரும்புமனிதன் படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி அதுவும் வசூலில் சக்கை போடு போட்டன. முதல் பாகத்தில் இரும்புமனிதன் அணிந்திருந்த உடையை அமெரிக்காவில் உள்ள திரைப்படப் பொருட்களை பாதுகாக்கும் மையத்தில் பத்திரப்படுத்தி வைத்து இருந்தனர். அந்த உடை இப்போது திடீரென்று காணவில்லை. இது படக்குழுவினருக்கும் இரும்புமனிதன் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாயமான உடையின் இந்திய மதிப்பு ரூ.2 கோடியே 60 லட்சம் ஆகும். இந்த உடையை யாரோ மர்ம ஆசாமிகள் திருடி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,784.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



