மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உயர்அறங்கூற்று மன்ற அறங்கூற்றுவர்களின் பணிகள் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். இதில் சென்னை உயர்அறங்கூற்று மன்றம் மற்றும் உயர்அறங்கூற்று மன்ற மதுரை கிளையின் அறங்கூற்றுவர்களின் பணிகள் மாற்றம் செய்யப்படும். மதுரை கிளைக்கு அனுப்பப்பட்ட அறங்கூற்றுவர்கள் உயர்அறங்கூற்று மன்ற அமர்வுக்கு மாற்றப்படுவார்கள். அதேபோல் சென்னையில் பணியாற்றும அறங்கூற்றுவர்கள் மதுரைக்கு மாற்றம் செய்யப்படுவார்கள். இந்நிலையில் அடுத்த 3 மாதங்களுக்கு உயர்அறங்கூற்று மன்றம் மற்றும் உயர்அறங்கூற்று மன்ற மதுரை கிளைக்கு அறங்கூற்றுவர்கள் மாற்றம் செய்யப்பட்டு, அவர்களுக்கான பணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை உயர்அறங்கூற்று மன்ற பதிவாளர் வெளியிட்டுள்ளார். இதுவரை 18 தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கை அறங்கூற்றுவர் துரைசாமி விசாரித்து வந்தார். இனி அக்டோபர் 4 முதல் உயர்அறங்கூற்று மன்ற அறங்கூற்றுவர் ரவிச்சந்திரபாபு இந்த வழக்கை விசாரிக்க உள்ளார். இதேபோல் தமிழக சட்ட பேரவையில் எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க கோரி எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு, திமுக சட்டமன்றஉறுப்பினர்களுக்கு உரிமை குழு அனுப்பிய அறிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உள்ளிட்டவற்றையும் அறங்கூற்றுவர் ரவிசந்திர பாபுதான் விசாரிக்கவுள்ளார். அறங்கூற்றுவர் சி.டி.செல்வம் அறங்கூற்று மன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரிப்பார். அறங்கூற்றுவர் கிருபாகரன் கல்வி தொடர்பான வழக்குகளை விசாரிப்பார் என்றும் உயர்அறங்கூற்று மன்ற பதிவாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



