Show all

கொரோனா குறித்து பீதியூட்டும் வகையான செய்திகளை நம்பவேண்டாம்! நோய்வராமல் காப்பது மிகச்சிறப்பு. கொரோனா குணமாக்கப்பட்டே வருகிறது

கொரோனா குறித்த பீதீயூட்டும் வகையான செய்திகளை நம்பவேண்டாம். கொரோன குறித்த தெளிவான தகவல்களை அரசு தரப்பு சிறப்பாக வழங்கி வருகிறது என தமிழகம் முழுவதும் மாவட்ட நிருவாகங்கள்  தெரிவித்து வருகின்றன.

04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா குறித்த பீதீயூட்டும் வகையான செய்திகளை நம்பவேண்டாம். கொரோன குறித்த தெளிவான தகவல்களை அரசு தரப்பு சிறப்பாக வழங்கி வருகிறது என திருப்பூர் மாவட்ட நிருவாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா நுண்ணுயிரி பாதிப்புகளை தடுக்கும் நடவடிக்கை குறித்த, அனைத்துத்துறை அலுவலர்களுடான ஆய்வுக்கூட்டம் நேற்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தலைமை வகித்தார். வருவாய்துறை அதிகாரி சுகுமார், திட்ட இயக்குனர் ரூபன் சங்கர்ராஜ், அரசு மருத்துவ கல்லூரி தலைவர் வள்ளி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சாந்தி உள்ளிட்டோர், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசினர்.

ஆட்சியர் பேசியதாவது: திருப்பூரில் கொரோனா பாதிப்பு இல்லை எனினும், அருகே உள்ள மாநிலங்களில் இருந்து நுண்ணுயிரி பரவாமல் தடுக்க வேண்டும். மாநில எல்லையான, உடுமலை தாலுகாவில், வருவாய்த்துறை, காவல்துறையினர், போக்குவரத்து துறையினர், சோதனைச் சாவடிகளில் முகாமிட்டு, கண்காணித்து வருகின்றனர். சோதனைச்சாவடிகளில், 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிப்பு நடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநில எல்லையோரம் உள்ள திரையரங்கங்கள், வணிக வளாகங்கள், மாத இறுதி வரை மூடப்பட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளும், நலங்குத்துறையினரும் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். மசூதிகள், கோவில்கள், தேவாலயங்களிலும் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் பரிசோதனைகள் நடத்த வேண்டும். சளி, இருமல் இருப்பவர்கள் பொது இடத்துக்கு வந்துசெல்வதை தடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளி நாடு மற்றும் வெளிமாநிலங்கள் செல்வதை, மாவட்ட மக்கள் தவிர்க்க வேண்டும். வெளியே சென்று திரும்பியதும், கைகளை, சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். பள்ளி விடுமுறை என்பதால், குழந்தைகள் குழுவாக விளையாடுவதை தவிர்க்க வேண்டும். சளி, இருமல் உள்ளவர்கள் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து, சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்று தொடர்பான, பீதியுட்டும் வகையான தகவல்களை நம்ப வேண்டாம்; அரசு தரப்பு தகவல்களை மட்டுமே பின்பற்ற வேண்டும். கட்டுப்பாட்டு அறைகூடுதல் தகவல்களுக்கு, 044 29510400, 29510500, 94443 40496, 87544 48477 என்ற எண்களில், மாநில கட்டுப்பாட்டு மையத்தை தொடர்புகொள்ளலாம். மாவட்ட கட்டுப்பாட்டு அறையை, 0421 1077, 0421 2971199 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

கொரோனா தாக்கினால், உடனே இறந்துவிடுவோம் என்ற அச்சம் தேவையில்லை. சளி, இருமல் போல, இதுவும் ஒருவரை நுண்ணுயிரி தாக்குதல் தான். சரியான சிகிச்சை அளித்தால், கண்டிப்பாக குணப்படுத்தலாம். பொதுமக்கள் விழிப்பாக இருந்து, கொரோனா வராமல் சமுதாயத்தை காக்க வேண்டும். அரசின் முயற்சிக்கு, அனைத்து தரப்பு மக்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு, ஆட்சியர் பேசினார். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.