Show all

வெளியே வந்தது பூனைக்குட்டி! ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு 324 ஏக்கர் சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கீடு

20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு சட்டவிரோதமாக 324 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதா என்ற விளக்கம் அளிக்குமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சிப்காட்டிற்கு கவனஅறிக்கை அளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையால் அந்தப் பகுதியில் மக்கள் வாழவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதன் பொருட்டு, மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுவாசப் பிரச்னை மற்றும் புற்றுநோய் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் கொதித்துப் போயுள்ளனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஸ்டெர்லைட் ஆலையை முழுவதுமாக மூட வலியுறுத்தியும் குமரெட்டியாபுரம் பகுதி மக்கள் 51வது நாளாக போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். 

இதனிடையே ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு சிப்காட் சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கீடு செய்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து தூத்துக்குடி சிப்காட் நிறுவனம் விளக்கம் அளிக்குமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கவனஅறிக்கை அளித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யப்பட உள்ள 624 ஏக்கர் நிலத்தில், 324.23 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டு குத்தகைக்கு சிப்காட்டிடம் இருந்து ஸ்டெர்லைட் நிறுவனம் பெற்றுள்ளது. சிப்காட் 2 என்ற புதிய தொழில்பூங்கா செயல்பட அரசு இன்னும் அனுமதி வழங்காத நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆலை விரிவாக்கத்திற்காக எப்படி நிலம் ஒதுக்கப்பட்டது. சட்டவிரோதமாக ஒதுக்கப்பட்ட நிலத்தில் எப்படி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளைத் தொடங்கியது என்பன உள்ளிட்ட கேள்விகளை சிப்காட்டிற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேள்வி எழுப்பியுள்ளது. 

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட சிப்காட் திட்ட இயக்குனர் விளக்கம் அளிக்கும்படி மாசு கட்டுப்பாட்டு வாரியம் கோரியுள்ளது. மக்களின் போராட்டம் 52வது நாளை எட்டியுள்ள நிலையில் இப்போது தான் சட்டவிரோதமாக ஸ்டெர்லைட்டுக்கு ஆலை விரிவாக்கத்திற்காக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,746.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.