Show all

பேரறிவாளனின் சிறைவிடுப்பை மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.

பேரறிவாளனுடைய தந்தையின் உடல்நிலையை காரணம் காட்டி அவரை சிறைவிடுப்பில் விடுவிக்கும்படி அவரது தாய் அற்புதம் அம்மாள் பலமுறை தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக முதல்வரை நேரில் சந்தித்தும் மனு அளித்தார். இதுகுறித்து சட்டப்பேரவையிலும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இந்நிலையில், கடந்த மாதம் 24-ம் பக்கல் வேலூர் சிறையில் இருந்த பேரறிவாளனை 30 நாட்கள் சிறைவிடுப்பில் அனுப்ப, தமிழக அரசு அனுமதித்து உத்தரவிட்டது. இதையடுத்து, அன்று இரவே சிறைவிடுப்பில் வெளிவந்த பேரறிவாளன் தன் சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்குச் சென்றார்.

இந்நிலையில் கடந்த செப்.20-ம் பக்கல் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி, சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோரை பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் சந்தித்தார். அப்போது, பேரறிவாளனுக்கு சிறைவிடுப்பு அளித்ததற்கு நன்றி தெரிவித்ததுடன், மருத்துவ சிகிச்சைகளை தொடரும்படி மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால், மேலும் 30 நாட்களுக்கு சிறைவிடுப்பை நீட்டித்து வழங்கும்படியும், நிரந்தர விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கும்படியும் கோரிக்கை விடுத்து மனு அளித்தார்.

இந்த மனுவை தமிழக சட்டத்துறை மற்றும் உள்துறை பரிசீலித்தது. நேற்று காலை இதுதொடர்பாக பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்,

சிறைவிடுப்பு தொடர்பான கோப்பு முதல்வரின் பரிசீலனையில் உள்ளது என்றார்.

இந்நிலையில், நேற்றிரவு பேரறிவாளனின் சிறைவிடுப்பை மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கான உத்தரவு, வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.