Show all

மனித உரிமைகள் குழுவின் உறுப்பு நாடுகள் தமிழீழதேசம் அமைக்க முன்வரவேண்டும்: வைகோ

ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைக் குழுவின் 36-வது கூட்டத்தில்,

தமிழர் உலகம்என்ற அமைப்பு சார்பில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:-

இலங்கைத் தீவில் தமிழர் தாயகத்தில் வாழும் ஈழத்தமிழர்களிடமும், உலகம் முழுமையும் வாழ்கின்ற புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களிடத்திலும், தமிழீழத்தேயம் அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதற்காக,

இந்தியாவில் 7½ கோடித் தமிழர்கள் வாழுகின்ற தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில், 2013 மார்ச் 27-ம் பக்கல் ஒருமனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1979-ம் ஆண்டு மே 10-ம் பக்கல், அமெரிக்க நாட்டில் உள்ள மசாசூசெட்ஸ் மாநிலத்தின் சட்டமன்றத்தின் மக்கள் பேராளர்கள் அவையிலும், ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மிகப் பழங்காலத்தில் இருந்து இலங்கைத் தீவில், தமிழர்களும் சிங்களவர்களும் முற்றிலும் வேறுபட்ட மொழிகளையும், மதம், பண்பாடு ஆகியவற்றோடு வாழ்கின்ற நிலப்பகுதிகளைக் கொண்டு இருந்தனர்.

பிரிட்டீஷ்காரர்கள் அத்தீவை வெற்றி கண்டபிறகு, தங்கள் நிர்வாக வசதிக்காக இரண்டு பகுதிகளையும் ஒன்றாக இணைத்தனர். எனவே, தமிழர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளுக்கு முடிவு கட்டவும், அவர்கள் படும் துன்பங்களில் இருந்து விடுவிக்கவும் அமெரிக்கக் குடியரசுத் தலைவரையும், அமெரிக்க நாடாளுமன்றத்தையும் வலியுறுத்துவது என இந்த மசாசூசெட்ஸ் சட்டமன்றம் தீர்மானிக்கின்றது என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது.

மேலும், மசாசூசெட்ஸ் மாநிலத்தின் ஆளுநர், எட்வர்டு ஜே.கிங், 1979 மே 22-ம் பக்கலை,

ஈழத்தமிழர் நாள்

என்று அறிவித்தார் என்பதையும் இந்த மன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

ஆனால் பிற்காலத்தில், அதே அமெரிக்க அரசாங்கம், இந்தியாவுடன் இணைந்து, முன்பு வகுக்கப்பட்ட நியாயமான கோரிக்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டு, ஈழத்தமிழர் இனப்படுகொலையை இலங்கை நடத்துவதற்குத் துணைபோயிற்று என்பதையும் வேதனையுடன் சுட்டிக் காட்டுகின்றேன்.

எனவே மனித உரிமைகள் குழுவின் உறுப்பினர் நாடுகள், பொது வாக்கெடுப்பின் மூலமாகத்

தமிழ் ஈழ தேசத்தைஅமைக்க முன்வர வேண்டுகிறேன்.

இவ்வாறு வைகோ பேசினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.