பிறந்து 7 நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகளை தூக்கிச் சென்ற குரங்குகள். ஒரு குழந்தை இறந்த நிலையில் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது. இது நடந்தது தஞ்சையில். 01,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: தஞ்சையில், பிறந்து 7 நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகளைத் தூக்கிச் சென்றன குரங்குகள். ஒரு குழந்தை அகழியில் சடலமாக மீட்கப்பட்டது. இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மேல அலங்கத்தில், இராஜராஜ சோழன் காலத்தில் வெட்டப்பட்ட அகழியை ஒட்டிய பகுதிகளில் நெருக்கமாக வீடுகள் அமைந்துள்ளன. இந்த பகுதியில் குரங்குகள் தொல்லை பெருகி வருவதாகவும், வீடுகளில் உள்ள பொருட்களை தூக்கிச் சென்று விடுவதாகவும் ஏற்கெனவே பல புகார்கள் உள்ளன. மேலவீதி கோட்டை அகழியைச் சேர்ந்தவர் 29 அகவை ராஜா. இவர் வண்ணமடிக்கும் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி அகவை 26. இவர்களுக்குத் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு ஏற்கெனவே அகவையுள்ள ஜீவிதா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 7 நாட்களுக்கு முன்பாக புவனேஸ்வரிக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன. பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகளுடன் வீட்டில் உறங்கி கொண்டு இருந்தனர். திடீரென வீட்டிற்குள் புகுந்த இரண்டு குரங்குகள் பெற்றோர் சுதாரிப்பதற்குள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 2 பச்சிளங் குழந்தைகளையும் தூக்கிச் சென்றுள்ளன. பதறிப்போய் பெற்றோர் குரங்குகளை பின்தொடர்ந்தனர். அப்போது, ஒரு குரங்கு வீட்டின் ஓட்டுக்கூரை மீது குழந்தையை போட்டுவிட்டு ஓடிவிட்டது. மற்றொரு குரங்கு குழந்தையுடன் ஓடிவிட்டது. அது சென்ற பகுதியில் தேடியுள்ளனர். அப்போது, பெண் குழந்தை அருகே இருந்த அகழியில் சடலமாக மீட்கப்பட்டது. இதனால் புவனேஸ்வரியும், உறவினர்களும் கதறி அழுதனர். குழந்தை உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.