தமிழக பாஜக பொறுப்பாளர்களுக்கு, கட்சியின் தலைமையிடமிருந்து தலையில் அடித்தார் போல ஆணை வராததால், அதிமுகவுடன் கூட்டணி உண்டா இல்லையா என்ற குழப்பத்தில் பேசி வருகின்றனர். அதிமுக தெளிவு. 13,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டபேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முதன்மைக் கட்சியான காங்கிரசுக்கு நாங்குநேரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் ரூபி மனோகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, நாங்குநேரி தொகுதியை தங்களுக்கு ஒதுக்குமாறு கேட்டதாக தெரிகிறது. இதில், அதிமுக -பாஜக இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து இருகட்சிகளுக்கு இடையேயான கூட்டணி, இடைத்தேர்தலுக்கு முன்பே முடிவுக்கு வரவுள்ளதாக பரவலாக கருத்து எழுந்துள்ளது. இதுதொடர்பாக, பாஜகவின் தமிழகப் பொறுப்பாளரும், இந்திய முன்னாள் அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் கூறும்போது, இடைத்தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடர்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. கட்சியின் இந்தியத் தலைமையை ஆலோசித்த பின்பே இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என பட்டும் படாமல் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அதிமுக -பாஜக கூட்டணி குறித்து, முதல்வர் பழனிசாமியிடம் சேலத்தில் செய்தியாளர்கள் நேற்று கேள்வியெழுப்பினர். அப்போது, ‘தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அதிமுக -பாஜக கூட்டணி தொடரும். கூட்டணி கட்சிகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும்போதே இடைத்தேர்தல்களில் அதிமுக தான் போட்டியிடும் என தெளிவாக சொல்லப்பட்டுள்ளது’ என முதல்வர் தெரிவித்துள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,291.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



