09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் கல்வியாண்டில் சேர்க்கை பெற, http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வெகுவாக குறைந்து வருவதாக, தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளது. தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இடங்கள் ஏழை, எளிய மாணவர்களுக்காக ஒதுக்க வேண்டும் என்ற அரசு உத்தரவு இருப்பதை அச்சங்கத்தின் தலைவரான இளமாறன் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் ஆண்டுதோறும் சராசரியாக 60,000 மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்ந்து பயிலுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இடஒதுக்கீடு என்ற முறையை தடுத்து நிறுத்தி, அதற்கு செலவழிக்கப்படுகிற சுமார் ரூ.100 கோடியை அரசு பள்ளிகளுக்கு பயன்படுத்தினால் அதில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 1 லட்சமாக உயரும். மேலும் அந்த நிதியை அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதி மற்றும் மேம்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என கருத்து தெரிவித்துள்ளார். இதைவிடுத்து ஆண்டுதோறும் சுமார் 60,000 மாணவர்களை அரசே தேர்வு செய்து தனியார் பள்ளியில் படிக்க உதவுவது மிகவும் வெட்கக்கேடான ஒன்று என சாடியுள்ளார். அந்த அளவிற்கு நல்லவர்களா நீங்கள்? எங்கே உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள், உங்கள் சங்கத்தில் உள்ள எத்தனை பேர் சொந்த நகைகளை விற்று அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்திய ஆச்சரிய ஆசிரியர் அன்னபூர்ணாவைப் போன்றவர்கள். அப்படிக் கூட செய்யவேண்டாம். எத்தனை பேரின் பிள்ளைகள் அரசு பள்ளியில் படிக்கின்றனர்? ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதைதான் இதெல்லாம். இந்த 25விழுக்காட்டு இடத்தை, அதிக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளியில், படிக்கப் போகிற ஏழை பிள்ளைகள் பயன் படுத்திக் கொள்ளப் போகிறார்கள்; அவ்வளவுதான். எந்தத் தோல்விக்கு வேண்டுமானாலும் அரசைக் குறை சொல்லலாம்; ஆனால் அரசு பள்ளி தோல்விக்கு மட்டும், முழுக்க முழுக்க அரசு பள்ளியில் சம்பளம் வாங்கிக் கொண்டு தனியார் பள்ளியில் தம் பிள்ளைகளை படிக்க வைக்கிற அரசு பள்ளி ஆசிரியர்களே அரசு பள்ளி தோல்விக்கு முழுப் பொறுப்பு. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,765.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



