11,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மாமியார் முடியை அறுத்து மருமகள் தானம் செய்த கதையாக, என்ற பழமொழிக்கொப்ப, தமிழர் உடைமையான கச்சத்தீவு சிங்களவர்களுக்கு, இந்திராகாந்தியால் தரை வார்க்கப் பட்டது. கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழர்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா வந்து விடுகிறது. தமிழ்நாட்டில் இருந்து சென்று பங்கேற்கும் தமிழர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு 100க்கும் மேற்பட்ட படகில் தமிழக மக்கள் அந்தோணியார் கோயில் திருவிழாவில் பங்கேற்றனர். இந்நிலையில் இன்றும் நாளையும் நடைபெறும் அந்தோணியார் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 40 அடி உயர தேக்கு மரத்தினால் செய்யப்பட்ட கொடி மரம் கச்சத்தீவுக்கு கொண்டு வரப்பட்டது. பங்குத்தந்தைகளின் சிறப்பு பிரார்த்தனைக்கு பிறகு கொடியேற்றம் நடந்திருக்கிறது. கொடியேற்றத்துடன் திருப்பலியும் கச்சத்தீவு திருவிழாவில் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு இந்த நிகழ்ச்சி முழுவதும் தடைபட்டது, தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டதால் தமிழக மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 62 படகுகளில் 2 ஆயிரத்து 100 மீனவர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று திருப்பள்ளி திருவிழாவைத் தொடர்ந்து தேரோட்டம், சிலுவைப் பாதை உள்ளிட்டவை நடைபெற உள்ளன. கச்சத்தீவு திருவிழா இதுவரை பழைய தேவாலயத்தில் நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு புதிதாக கட்டப்பட்டுள்ள அந்தோணியார் கோவிலில் நடைபெற்று வருகிறது. பழைய தேவாலயம் இடிக்கப்படாமல் அதற்கு அருகிலேயே புதிய அந்தோணியார் கோயில் கட்டப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,707
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



