Show all

இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து தமிழர்கள் அரசியலுக்கு முயலவேயில்லை

இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து தமிழர்கள் ஆட்சிக்கு முயன்றார்களே யொழிய அரசியலுக்கு முயலவேயில்லை.

ஆனால் வடபுல அரசியல்வாதிகள் நன்றாக அரசியல் செய்தார்கள்; செய்து கொண்டே இருக்கிறார்கள்.

தமிழர்கள் காமராசரிலிருந்து எடப்பாடியார் வரை யாருக்கும் அரசியல் கைவரவேயில்லை.

ஆனால் நேரு அவர்களில் இருந்து இன்றைக்கு மோடி வரை வடபுல அரசியல்வாதிகள் செவ்வனே அரசியல் செய்வார்கள். இன்றைக்கும் செய்து கொண்டிருப்பதும் அதுதான்.

ஆங்கிலேயர்கள் இந்தியா மீதான ஆளுமையை விலக்கிக் கொண்;ட போது, நம்மிடம் இருந்தது இந்தியஒன்றியம்.

வடபுல அரசியல்வாதிகள் செய்த அரசியல், அதை இந்தியக் குடிஅரசாக்கியது.

இந்தியாவின் ஆட்சிமொழி என்று எதுவும் இல்லை. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 22மொழிகள் அலுவல் மொழிகள்.

வடபுல அரசியல்வாதிகள் செய்த அரசியல், எல்லா சட்ட திட்ட நடைமுறைகளையும் ஆங்கிலத்தோடு ஹிந்தியில் மட்டும் எழுதிக் கொண்டார்கள். எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழர்களுக்கான கொள்கை முழக்கங்களோடு தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றிய திமுக அரசியலை முன்னெடுக்கவேயில்லை.

ஹிந்தியை ஆட்சிமொழி என்று எண்ணி திமுகவே ஹிந்தியைத் திணிக்காதே என்று நேருவிடம் மண்டியிட்டு கேட்டது.

அவரும் ‘ஹிந்தி பேசாத மக்கள் விரும்பாத வரை ஹிந்தி திணிப்பு இல்லைஎன்று அரசியல் செய்தார்.

அந்த அரசியலையும் புரிந்து கொள்ளாத திமுக, ‘அந்த உறுதிமொழியைச் சட்டமாக்கித் தாருங்கள் என்றது பணிவோடு.

திமுக என்ன செய்திருக்க வேண்டும்?

யாரப்பா அது மொட்டை மாடி(கல்பனாவா) நேருவா? ஹிந்தி தமிழோடு இந்தியாவின் ஒரு அலுவல் மொழிதானாமே?

என்று கேட்டிருக்க வேண்டும்.

1952-ல் இந்தியா அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது மாநில அரசுக்கான அதிகாரங்கள் பட்டியல் 11-ல் மருத்துவம் உள்ளிட்ட உயர்படிப்புகள், பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்திருந்தன.

1976-ல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டுவந்தார் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி.

அப்போது தமிழகத்தில், திமுக ஆட்சியைக் கலைத்து விட்டு குடிஅரசு தலைவர் ஆட்சியைக் கொண்டு வந்திருந்தார் இந்திரா.

1976 டிசம்பர் 18 -ல் கொண்டு வரப்பட்ட அந்த 42-வது சட்டத் திருத்தத்தின் மூலம் மாநில அரசுக்கான அதிகாரங்கள் சிலவற்றை நடுவண் அரசு எடுத்துக்கொண்டது. அப்போதுதான் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியும் பல்கலைக்கழகங்களும் மாநில அரசுகளின் கைகளை விட்டுப் போயின.

1977-ல் பொறுப்புக்கு வந்த ஜனதா அரசு, இந்திரா காந்தியின் சட்டத்திருத்தங்களில் பெரும்பகுதியை ரத்து செய்தது. ஆனால் உயர்கல்வி, பல்கலைக்கழகங்கள் விசயத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் உள்ளிட்டவற்றை மட்டும் அப்படியே விட்டுவிட்டது. அதன் பின்விளைவுகளைத்தான் இப்போது நாம் அனுபவிக்கக் காத்திருக்கிறோம்.

‘நீட்தேர்வை அமல்படுத்தப்போவதாக 2013-ல் தீர்மானம் போட்டது இந்திய மருத்துவக் கவுன்சில். வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியானது இதை எதிர்த்து உச்ச அறங்கூற்றுமன்றம் சென்றது. சிறுபான்மையினர் கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட விவகாரங்களில் நடுவண் அரசு தலையிடமுடியாது என்ற வாதத்தை முன்வைத்தார்கள்.

அறங்கூற்றுவர்கள் அனில் தவே, அல்டாமஸ் கபீர், விக்கிரம்ஜித் சென் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. முடிவில், ‘நீட்தேர்விலிருந்து கிறிஸ்தவக் கல்லூரிக்கு விதிவிலக்கு தர முடியாது என அனில் தவேவும் விலக்களிக்க வேண்டும் என மற்ற இரு அறங்கூற்றுவர்களும் மாறுபட்ட தீர்ப்புகளை எழுதினார்கள். கடைசியில், இருவர் தீர்ப்பே இறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த அல்டாமஸ் கபீரும் விக்ரம்ஜித் சென்னும் ஓய்வுபெற்ற நிலையில்,

அனில் தவே உச்ச அறங்கூற்றுமன்ற மூத்த அறங்கூற்றுவராகப் பணியைத் தொடர்ந்தார்.

தொடங்கியது வடபுல அரசியல்!

அப்போது, ‘நீட்விவகாரத்தில் ஏற்கெனவே அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச அறங்கூற்றுமன்றத்தில் முறையீடு செய்தது மருத்துவக் கவுன்சில். அனில் தவே தலைமையில் ஐந்து அறங்கூற்றுவர்கள் கொண்ட அமர்வு மனுவை விசாரித்தது. முடிவில், அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் ‘நீட்தேர்வு கட்டாயம், இதை அடுத்த கல்வியாண்டே அமல்படுத்த வேண்டும் என ஏப்ரல் 11, 2016-ல் உத்தரவிட்டது உச்ச அறங்கூற்றுமன்றம்.

வடபுல அரசியலால் உடைமையை இழக்கிறோம் என்றே புரிந்து கொள்ள முயலாமல், 2016 ஆண்டுக்கு மட்டும் ‘நீட்தேர்விலிருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனத் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் உரிமை கோரிக்கை வைத்தன.

சொந்த வீட்டில் நமக்கிருப்பது அதிகாரம். வாடகை வீட்டில் நமக்கிருப்பது உரிமை.

நீட் டா? அது எனக்கெதற்கு? என்று கேட்கிற நிலையிலிருந்து தாழ்ந்து,

2016-17 கல்வி ஆண்டுக்கு மட்டும் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு ‘நீட்தேர்விலிருந்து விதிவிலக்கு கேட்டுப் பெற்றன. ஓர் ஆண்டுக்கு மட்டும் விலக்கு கேட்ட மாநிலங்கள், அடுத்த ஆண்டுக்கு என்ன செய்யப் போகிறோம் என்று அப்போதே யோசிக்கவில்லை.

நாம் அரசியலைக் கற்றுக் கொள்ளாததால் மட்டுமே உடைமைகளை இழந்து அதிகாரத்திற்குரியவர்கள் அடிமைகள் போல் உரிமைகளுக்குப் போராடிக் கொண்டிருக்கிறோம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.