நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவ, மாணவிகள் போராட்டத்திற்கு பொதுமக்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் அரசு பள்ளி மாணவிகள் போராட்டம் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெண் காவலர்களைக் கொண்டு மாணவிகளை குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்துகின்றனர். இதனால் காவல்துறையினருக்கும், மாணவிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருபக்கம் வெளியேற்றப்படும் மாணவிகள் மீண்டும் வந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் செய்வதறியாது திகைத்து நின்றனர். ரத்து செய்! ரத்து செய்! நீட் தேர்வை ரத்து செய்! வேண்டாம், வேண்டாம்! நீட் தேர்வு வேண்டாம்! என்று முழக்கமிட்டனர். ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் வந்து சமாதானப்படுத்தியதை அடுத்து மாணவிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு, பள்ளியின் நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்கள் சமாதானம் செய்யும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



