Show all

தற்போது தமிழக காங்கிரசும்! குளங்களை தூர்வாரும் பணிகளைத் தமிழகம் முழுவதும் முன்னெடுக்கும் நாம்தமிழர் கட்சி போல

நாம் தமிழர் கட்சி அண்மைக் காலமாகவே சுற்றுச்சூழல் பாசறை என்றொரு அமைப்பை நிறுவி தமிழகம் முழுவதும் ஏரி குளங்களை தூர்வாரும் பணியை முன்னெடுத்து வருகிறது. தற்போது, மாவட்டத்துக்கு ஒரு குளத்தைத் தூர்வார தமிழக காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது.

27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்டத்துக்கு ஒரு குளத்தைத் தூர்வார முடிவெடுத்திருப்பதாகவும், இதற்கான செலவுகளை கடும் சிரமத்துக்கிடையில் சமாளிப்பதாகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஓர் ஏவுகணையில் 100 கிலோ வெடிமருந்தை நிரப்பி விண்ணில் செலுத்தக்கூடிய அரசால், ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் கொண்டுவர முடியவில்லை. ஒரு மாதத்துக்கு முன்னரே செய்திருக்க வேண்டிய இந்த நடவடிக்கையை, மிக மிக காலதாமதமாக இப்போதுதான் செய்கின்றனர். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து, கூடுதல் நிதி ஒதுக்குவதுடன், தண்ணீர்ப் பற்றாக்குறையைத் தீர்க்க நடுவண், மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்டத்துக்கு ஒரு குளத்தைத் தூர்வாருவது என முடிவெடுத்துள்ளோம். தற்போதைக்கு 15 குளங்களில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தூர்வாரி எடுத்த மண்ணைக்கொண்டே அக்குளத்தின் கரையைப் பலப்படுத்துகிறோம். கடந்த கிழமை திருவள்ளூர் மாவட்டம் தேவந்தவாக்கம் கிராமத்திலுள்ள ஐந்து ஏக்கர் குளத்தில், தூர்வாரும் பணியைத் தொடங்கினோம். ஒவ்வொரு குளத்தையும் தூர்வாருவதற்குக் குறைந்தது பத்து லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. எங்கள் கட்சியில் இருப்பவர்கள் யாரும் பெரும் செல்வந்தர்கள் கிடையாது. தொண்டர்கள், பொதுமக்களின் பங்களிப்போடு இப்பணி நடைபெறுகிறது.

மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னர், தமிழகம் முழுவதும் குறைந்தது 30 குளங்களையாவது தூர்வார தமிழக காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது” என்று தெரிவித்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,211.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.