08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகம் எத்தனையோ போராட்டங்களைச் சந்தித்திருக்கிறது. ஒரு முதலாளிக்கு ஆதரவாக 10 பேரை பலி கொண்ட காவல்துறை வன்முறை- போராட்டக்காரர்கள் தங்கள் உரிமைக்கு கொடுத்த மிகப் பெரிய விலை. எல்லோருமே மார்பில் குண்டு பட்டு பலியாகியிருப்பது காவல் துறை மீது திட்டமிட்ட வெறியாட்டம் என்றே அரசியல் தலைவர்கள் பதிவு செய்து வருகிறார்கள். மக்கள் வன்முறையைக் கையிலெடுத்ததால் காவல்துறையின் துப்பாக்கிச் சுடு தவிர்க்க முடியாததாகிப் போனது என்கிற மீன் வளத்துறை அமைச்சரின் வழக்கமான முந்திரிக்கொட்டைத் தனமான பேச்சு தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி யிருக்கிறது. திருமாவளவன் அவர்கள், இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ஒவ்வொரு கோடி இழப்பீடும் குடும்பத்தினர் ஒருவருக்கு வேலை வாய்ப்பும் வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். முத்தரசன் அவர்கள் முதல்வருக்கு இரண்டு வாய்ப்புகள் தாம் இருக்கின்றன. ஒன்று ஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை எடுப்பது. இரண்டாவது தன்னால் முடியாது என்று பதவி விலகுவது என்று தெரிவித்திருக்கிறார். நிறைய இணைய ஆர்வலர்கள், சீருடை அணிந்த காவலரைத் தாக்குவது உச்ச கட்ட வன்முறை என்று கொந்தளித்த ரஜினியே! பதிமூன்று பொதுமக்களைச் சூட்டுக் கொன்று விட்டதே சீருடை அணிந்த காவல்துறை. எங்கே போனாய்? என்று ரஜினியை வம்புக்கு இழுத்து இருக்கிறார்கள். அனைத்து செய்தி தொலைக்காட்சி சேனல்களும் ஸ்டெர்லைட் போராட்டக் காட்சிகளை தொடர்ந்து மீண்டும் மீண்டும் ஒளிபரப்பியும் தலைவர்களின் கண்டனங்களை வெளியிட்டும் வருகிறார்கள். மக்கள்- தொலைக் காட்சியின் முன் அமர்ந்து வழக்கமாக பார்க்கிற தொடர்களையெல்லாம் விட்டு விட்டு நல்ல முடிவு வரவேண்டுமே என்று ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,795.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



