Show all

தமிழகம் மற்றும் புதுச்சேரி நாடளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல் நிறைவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற இடைதேர்தல் தொகுதிகளுக்கு வேட்புமனு பதிகை நிறைவடைந்தது. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்த நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வேட்பாளர்கள் பட்டியல் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் அறிவிப்பு பலகையில் வெளியிட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 845 வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 269 வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக வேட்பாளர்கள் 20 மக்களவைத் தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் களமிறங்குகின்றனர். இவை தவிர, கூட்டணியில் உள்ள புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி வேட்பாளர்களும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். தமிழ் மாநில காங்கிரஸ் ஆட்டோ ரிக்ஷா சின்னத்திலும், பாமக 7 தொகுதிகளில் மாம்பழம் சின்னத்திலும், பாஜக 5 தொகுதிகளில் தாமரை சின்னத்திலும், 4 தொகுதிகளில் தேமுதிக முரசு சின்னத்திலும் களம்காண்கிறது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் ஜக்கு சின்னத்தில் போட்டியிடுகிறது.

இதேபோல், திமுக வேட்பாளர்கள் 20 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். அவர்களை தவிர, கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார், மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி, கொங்கு தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் சின்ராஜ், இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் ஆகிய 4 பேரும், திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே களமிறங்குகின்றனர்.

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் பானை சின்னத்திலும், ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி ஏணி சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் 10 தொகுதிகளில் கை சின்னத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் 2 தொகுதிகளில் கதிர் அரிவாள் சின்னத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளில் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திலும் களம்காண்கின்றனர்.

இதனிடையே, புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் 18 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதாக மாவட்ட துணை தேர்தல் அதிகாரி சக்திவேல் அறிவித்துள்ளார். தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 8 பேர் களத்தில் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,70,107.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.