Show all

ஆறு அறங்கூற்றுவர்கள் சூர்யா மீது நடவடிக்கை வேண்டாம்என மடல்! ஒரு அறங்கூற்றுவர் சூர்யா மீது நடவடிக்கை விரும்பிய நிலையில்

சூர்யா மீது நடவடிக்கை வேண்டாம் என்று தெரிவித்துள்ள ஆறு அறங்கூற்றுவர்கள்- சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தின் மாண்பு, மதிப்பு மீது அக்கறை உள்ளதாக தெரிவித்து, தேவையில்லாத சர்ச்சைகளுக்கு இடம்கொடுக்க வேண்டாமென கோரிக்கை விடுப்பது தங்கள் கடமை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

29,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: சூர்யா மீது நடவடிக்கை வேண்டாம் என்று சென்னை உயர்அறங்கூற்றுமன்றத் தலைமை அறங்கூற்றுவருக்கு ஆறு முன்னாள் அறங்கூற்றுவர்கள் மடல் எழுதியுள்ளனர்.

அறங்கூற்றுமன்றம் குறித்து பேசிய நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை. அவர் மாணவர்கள் மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்த போது அறங்கூற்றுமன்றத்தை அவ்வாறு கூறிவிட்டார். மற்றபடி அவரது பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை என சென்னை உயர்அறங்கூற்றுமன்றத் தலைமை அறங்கூற்றுவர் சாகுவுக்கு ஆறு முன்னாள் அறங்கூற்றுவர்கள் மடல் எழுதியுள்ளனர்.

கொரோனா காலத்தில் நீட் தேர்வு நடத்த வேண்டாம் என அனைத்து தரப்பினரும் கூறி வந்த நிலையில் நேற்று நீட் தேர்வு பல்வேறு குளறுபடிகளுடன் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த நிலையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்கள் 3 பேர் தேர்வுக்கு முந்தைய நாள் ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்டனர். இது தமிழக அரசியலில் புயலை கிளப்பியது. இந்த நிலையில் நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் அவர் கூறுகையில் கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து காணொளி கலந்துரையாடல் மூலம் தீர்ப்பு வழங்கும் அறங்கூற்றுமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுதலாம் என உத்தரவிடுகிறது என சூர்யா அறங்கூற்றுமன்றம் குறித்து தெரிவித்திருந்தார். 

இதற்கு சுப்பிரமணியம் என்கிற அறங்கூற்றுவர் ஒருவர் தலைமை அறங்கூற்றுவருக்கு சூர்யாவின் கருத்து மீது அவமதிப்பு வழக்கு முன்னெடுக்க வேண்டும் என மடல் ஏழுதியிருந்தார். 

இதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா கூறுகையில், நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க கூடாது. சூர்யா கருத்துக்கள் அறங்கூற்றுமன்ற அவமதிப்பாக கருதப்பட்டால் அது கருத்துக் சுதந்திரத்திற்கு எதிரானதாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார். 

ஓய்வு பெற்ற அறங்கூற்றுவர் சுதந்திரம் கூறுகையில் சூர்யாவின் கருத்திற்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கெல்லாம் வேண்டாம். மேலும் அவர் கூறியது நீதிமன்ற அவமதிப்பா இல்லையா என ஆராயாமல் பெருந்தன்மையாக விட்டுவிடலாம். நீட் மீதான கோபத்தின் வெளிப்பாடே சூர்யாவின் அறிக்கை என்று தெரிவித்திருந்தார். அறங்கூற்றுமன்ற நடைமுறைகளை ஒரே ஒரு நாள் நடைபெறும் தேர்வுடன் ஒப்பிட முடியாது என டி சுதந்திரம் தெரிவித்தார். 

சென்னை உயர்அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் ஏ.பி.சாகுவுக்கு ஆறு முன்னாள அறங்கூற்றுவர்களான சந்துரு, பாட்சா, சுதந்திரம், அரிபரந்தாமன், அக்பர் அலி, கண்ணன் ஆகியோர் மடல் எழுதியுள்ளனர். சூர்யா மீது நடவடிக்கை தேவையில்லை. மாணவர்கள் மரணம் காரணமாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும் கடிதத்தில் தெரிவித்துள்ளனர். சூர்யாவின் அறக்கட்டளை மூலமாக நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர் கல்வி முடித்து நல்ல வேலைவாய்ப்பை பெற்றுள்ள நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பெருந்தன்மையாக விட்டுவிட வேண்டும் என ஓய்வுபெற்ற அறங்கூற்றுவர்கள் என்ற முறையில் கேட்டுக் கொண்டுள்ளதாக கடிதத்தில் தெரிவித்துள்ளனர். 

சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தின் மாண்பு, மதிப்பு மீது அக்கறை உள்ளதாக தெரிவித்துள்ள ஓய்வுபெற்ற அறங்கூற்றுவர்கள், தேவையில்லாத சர்ச்சைகளுக்கு இடம்கொடுக்க வேண்டாமென கோரிக்கை விடுப்பது தங்கள் கடமை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.