28,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நீட் தேர்வில் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கிய வழக்கில், உச்சஅறங்கூற்றுமன்றத்தில் பாராளுமன்றஉறுப்பினர் டி.கே ரங்கராஜன் முன்னெச்சரிக்கை மனு பதிகை செய்துள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டதில் நிறைய குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என்று மதுரை உயர்அறங்கூற்றுமன்றக் கிளை நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கட்சி பாராளுமன்றஉறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மதுரை உயர்அறங்கூற்றுமன்றக் கிளையில் வழக்கு தொடுத்தார். 49 வினா-விடைகள் தவறாக இருந்ததால் கேள்விக்கு 4 மதிப்பெண் என்று மொத்தமாக தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் உச்ச அறங்கூற்றுமன்றம் செல்ல வாய்ப்புள்ளது. நீட் கருணை மதிப்பெண் வழக்கில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதால் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் டி.கே ரங்கராஜன் முன்னெச்சரிக்கை மனு பதிகை செய்துள்ளார். இதனால் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் மேல்முறையீடு செய்தால் டி.கே ரங்கராஜன்; கருத்தையும் உச்ச அறங்கூற்றுமன்றம் கேட்க வேண்டும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,846.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



