27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடக அடாவடி, நடுவண் அரசுகளின் பொறுப்பின்மை உச்சமடைகின்ற போதெல்லாம், அவர்கள் மீது கோபம் கொண்டு, இந்திய விடுதலைக்குப் பின்பும் கர்நாடகம் அத்து மீறி கட்டிய அணைகள் நிரம்பி வழிய மழையைக் கொட்டோ கொட்டென்று கொட்டுவாள். இயற்கை. இந்த முறையும் அதுதான் நடந்திருக்கிறது. கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. காவிரியின் குறுக்கே அமைந்துள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அந்த அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கபினி ஆறு உற்பத்தியாகும் கேரள மாநிலம் வயநாடு மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. 84 அடி உயரம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று முழு கொள்ளவை எட்டி நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் உபரி நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. இன்று 38 ஆயிரத்து 667 கன அடி திறந்து விடப்படுகிறது. 124 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 115.2 அடியாக உள்ளது. இன்று தண்ணீர் வரத்து 35 ஆயிரத்து 698 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து 3658 கனஅடி உபரி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. ஹேரங்கி அணைக்கு இன்று காலை 14 ஆயிரத்து 973 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 11 ஆயிரத்து 938 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதே போல ஹேமாவதி அணைக்கு 20 ஆயிரத்து 535 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 2400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு செல்கிறது. கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட 42 ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் தமிழகத்தை நோக்கி வேகமாக வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. ஒகேனக்கலில் முதன்மை அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குளிக்கவும், பரிசல் இயக்கவும் 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்வதையும், அருவிகளில் தண்ணீர் கொட்டுவதையும் சுற்றுலா பயணிகள் கரையில் நின்று வேடிக்கை பார்த்து வருகிறார்கள். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று 14 ஆயிரத்து 434 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 32 ஆயிரத்து 284 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 1000 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்து நீர்மட்டம் 68.42 அடியாக அதிகரித்தது. கடந்த 2 நாட்களில் 5 அடி உயர்ந்துள்ளது கர்நாடக அணைகளை திறக்க வைத்து, காவிரி தமிழகம் நோக்கி ஆர்பரித்து வருகிறாள். இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் நாளைக்குள் 70 அடியை தொட்டு விடும். மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தால் அணையின் நீர்மட்டம் அன்றாடம் 1அடி அதிகரிக்கும். தற்போது 32ஆயிரம் கனஅடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் அன்றாடம் 3அடி வீதம் உயர வாய்ப்பு உள்ளது. கிருஷ்ண ராஜசாகர் அணை நீர்மட்டம் 115 அடியை தாண்டி உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 40ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் இன்னும் ஒரு கிழமையில் அந்த அணையும் நிரம்பி வழியும். அதன்பின்னர் அந்த அணையில் இருந்தும் தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படும். தென்மேற்கு பருவமழை காலம் இன்னும் 2 மாதம் உள்ளது. இந்த 2 மாதங்களில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் தமிழகத்திற்கு தொடர்ச்சியாக வரும். இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால் காவிரி கழிமுக பாசனத்திற்காக அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டு அடிப்பெருக்கு விழாவை மேட்டூர் வரலாறு காணா வகையில் கொண்டாடும். ஆடிப்பெருக்கு விழாவிற்கு தமிழகம் முழுவதும் இருந்தும் மக்கள் அலைகடலெனத் திரண்டு வருவார்கள். வாழ்க இயற்கை அன்னை! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,845.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



