செயலலிதாவின் சகோதரர் பிள்ளைகளான தீபா, தீபக் ஆகியோர் செயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளாக தங்களை அறிவிக்கக் கோரி சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் மனுபதிகை செய்திருந்த வழக்கில் அவர்களுக்கே சாதகமாக தீர்ப்பு வெளியானது. 15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: அதிமுகவின் பொதுச் செயலளராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் இருந்த செயலலிதா நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வாரிசு இல்லாததால் சட்டப்படி அவருக்கு வாரிசு யார் என கேள்வி எழுந்தது. அத்துடன் அவரது ரூ.913 கோடி சொத்துகள், அவர் வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் உள்ளிட்டவைகள் யார் வசம் செல்லும் என்பது குறித்தும் பரவலாக பேசப்பட்டது. இதையடுத்து, செயலலிதாவின் சகோதரர் பிள்ளைகளான தீபா, தீபக் ஆகியோர் செயலலிதாவின் சட்ட அடிப்படை வாரிசுகளாக தங்களை அறிவிக்கக் கோரி சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் மனுபதிகை செய்தனர். அதேபோல், செயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி அதிமுகவை சேர்ந்த புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோரும் வழக்கு தொடர்ந்தனர். இது ஒருபுறமிருக்க, செயலலிதா வசித்த போயஸ் தோட்டம் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்து, நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது. இவ்வாறன நிலையில், செயலலிதாவின் வாரிசுகள், அவரது சொத்தை நிர்வகிப்பது யார் என்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் அறங்கூற்றமன்றம் நேற்று வழங்கியது. அதன்படி, செயலலிதாவுக்கு நேரடி வாரிசு இல்லாததால் இந்திய வாரிசுரிமை சட்டப்படி, அவரது உறவினர்களான தீபா, தீபக் ஆகியோரை சட்டப்பூர்வமான இரண்டாம் நிலை வாரிசுகளாக உயர் அறங்கூற்றுமன்றம் அறிவித்தது. அத்துடன், செயலலிதா போயஸ் தோட்டம் இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்த உயர் அறங்கூற்றுமன்றம், செயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவு இல்லமாக மாற்றலாம் என கருத்து தெரிவித்ததுடன், அதனை முதலமைச்சரின் அதிகாரப்பாட்டு இல்லமாக ஏன் மாற்ற கூடாது எனவும் கேள்வி எழுப்பியது. இதுதொடர்பாக 8 கிழமைகளுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



