வீட்டிலேயே இயற்கை முறையில் குழந்தை பெற்றதால் காவல்துறையினர் கைது செய்ய முயற்சிப்பதாக பெரம்பலூர் இணையர் குற்றச்சாட்டு 15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: வீட்டிலேயே இயற்கை முறையில் குழந்தை பெற்றதால் காவல்துறையினர் கைது செய்ய முயற்சிப்பதாக பெரம்பலூர் இணையர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவர்கள் காணொளி வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் துறைமங்கலம் புதிய குடியிருப்பு 2-வது குறுக்கு தெருவில், வாடகை வீட்டில் சதீஷ்குமார் என்பவர், மனைவி பேபி (அகவை 35) மற்றும் குடும்பத்தினருடன் கடந்த சில மாதங்களாக வசித்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியான பேபிக்கு கடந்த சில கிழமைகளுக்கு முன்பு வீட்டிலேயே பிரசவம் நடந்து ஆண் குழந்தை பிறந்தது. இந்தத் தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டநிலையில், நலங்குத்துறையினர், பேபியை தொடக்க நலங்கு நிலையத்திற்கு அழைத்து சென்று இரத்த பரிசோதனை செய்தனர். பரிசோதனையில், அவருக்கு ரத்தம் குறைவாக இருந்தது தெரியவந்தது. இதனால் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு வந்து இரத்தம் ஏற்றிக்கொள்ளுமாறு நலங்குத்துறை அதிகாரிகள் கூறினர். அதற்கு பேபி மறுத்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து பெரம்பலூர் காவல்துறையினர், பேபி குடும்பத்தினரிடம் கலந்துரையாடியுள்ளனர். அப்போது பேபி குடும்பத்தினர் காவல்துறையினரிடம் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர், பேபியை வலுக்கட்டாயமாக சிகிச்சைக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர். ஆனால், பேபி தனது கணவர், குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் வீட்டில் இருந்து வெளியேறி தப்பி சென்று விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், பேபி மற்றும் அவரது குடும்பத்தினரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பேபி வசித்த வீட்டை பூட்டிய நலங்குத்துறையினர் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்று விளம்பரம் ஒட்டினர். இந்தநிலையில், குழந்தையுடன் பேபி மற்றும் அவரது கணவர் சதீஷ்குமார் பேசிய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாகி வருகிறது. அதில், எனது மனைவியும், குழந்தையும் நலமாக உள்ளனர். ஆனாலும் நலங்குத்துறையினர் காவல்துறையினரை வைத்து பொய் வழக்கு போட்டு கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு எங்களை மிரட்டி வருகிறார்கள். குடிஅரசு நாட்டில் வீட்டில் ஒரு பெண்ணுக்கு இயற்கையான முறையில் பிரசவம் பார்க்கப்பட்டு குழந்தை பிறந்தது குற்றமா? என்று சதீஷ்குமாரும், அதிகாரிகள் மிரட்டியே நல்லாயிருந்த உடலையும் மோசமாக்கி விட்டதாக பேபியும் கூறுவது போல் அந்தக் காணொளி அமைந்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



