15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஸ்டெர்லைட் ஆலையை இதுவரை 3 முறை மூடியும், அந்த ஆலை மீண்டும் செயல்பட்டுள்ளது. இப்போது அரசு 4வது முறையாக பூட்டியுள்ளதால், மக்கள் இன்னும் முழு நம்பிக்கையை பெறவில்லை. ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கந்தக-டை-ஆக்சைடுடன் நச்சு வாயுக்கள் வெளியாகி அப்பகுதியில் வசித்த மக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு ஆலைக்கு எதிராகச் சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்குகளைத் தொடுத்தனர். இந்த வழக்கில் நாக்பூரைச் சேர்ந்த தேசியச் சுற்றுச்சூழலுக்கான பொறியியல் ஆராய்ச்சி மையம், ஸ்டெர்லைட் ஆலை வளாகத்திலும் அதனைச் சுற்றி உள்ள இடங்களிலும் நிலத்தடி நீர் மிகவும் பாதிப்படைந்திருக்கிறது என்றும் சுற்றுப்புறக் கிராமங்களின் நிலத்தடி நீரில் குரோமியம், தாமிரம், ஈயம், காட்மியம், குளோரைட், புளோரைட், ஆர்சனிக் தாதுப் பொருள்கள் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் மிகவும் கூடுதலாக இருக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஆலையை மூட உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. இது முதல் முறையாக மூடப் பட்டது. இரண்டு மாதங்களில் ஸ்டெர்லைட் இயக்க அனுமதிக்கப்பட்டு, அதே அமைப்பை கொண்டு சோதனை நடத்தி, ஆச்சரியமான விதமாக ஸ்டெர்லைட் பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டதாக அந்த அமைப்பு; அறிக்கை பதிகை செய்தது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கிடையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் தொடரப் பட்ட வழக்கில், சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் இதை எதிர்த்து உச்ச அறங்கூற்றுமன்றம் சென்ற ஆலை நிர்வாகம் அங்கு வெற்றி பெற்றது. ரூ.100 கோடி நஷ்ட ஈடு அளித்துவிட்டு மீண்டும் ஆலையை இயக்கலாம் என்று உத்தரவிட்டது. இதன் பிறகு 3வது முறையாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பெரும் விபத்து காரணமாக, அப்போதைய முதல்வர் செயலலிதா, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கைபடி ஸ்டெர்லைட்டை மூட உத்தரவிட்டார். ஆனால், தென்னிந்திய தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் வழக்கு பதிகை செய்தது. ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து நச்சு வாயு வெளியேறியதற்கான அறிவியல் ஆதாரம் இல்லாததால் அந்த ஆலையைத் திறக்க டெல்லி தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. இந்த நிலையில், 4வது முறையாக நேற்று ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. இதையும் அறங்கூற்று மன்றம் வாயிலாக தகர்த்து ஸ்டெர்லைட் மீண்டும் திறக்க வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க, அமைச்சரவையை கூட்டி தமிழக அரசு கொள்கை முடிவாக தமிழக அரசு அறிவித்திருக்க வேண்டும். அரசின் கொள்கை முடிவு என்றால் அதில் அறங்கூற்றுமன்றம் தலையிடாது. ஆனால், வெறுமனே ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளதால், எளிதாக, இதை நீதிமன்றம் வழியாக ஸ்டெர்லைட் கடந்து செல்ல முடியும். எனவே உடனடியாக அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவாக அரசு இதை அறிவித்தால் மட்டுமே தூத்துக்குடி மக்களுக்கு நியாயம் கிடைக்கும். இதுபற்றி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறுகையில், வெறுமனே ஒரு உத்தரவை பிறப்பித்து ஸ்டெர்லைட்டை முடக்க முடியாது. மாமுல் ரேட்டை உயர்த்த வேண்டுமானால் இது உதவும் என்றார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,802.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



