15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்சஅறங்கூற்றுமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதித்தாலும் தூத்துக்குடியில் ஆலையை இயங்க நாங்கள் விடமாட்டோம் என்றும் கட்சி கொடி இல்லாமல் ஒரு லட்சம் மக்களை திரட்டி போராடுவோம் என்றும் வைகோ தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது. தலைமை அமைச்சர் மோடியின் கைப்பாவையாக அதிமுக அரசு செயல்படுகின்றது. சட்ட விரோதமாக சாதாரண ஆடையில் இருந்த காவல்துறையினர் ஸ்நைப்பர் துப்பாக்கி மூலம் பொதுமக்களை குறிவைத்து சுட்டு கொன்றுள்ளனர். துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்த காவல்துறையினர் தூத்துக்குடியில் வாகனங்களுக்கு தீ வைத்தனர். ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பில் தீ வைக்கப்பட்டது என தகவல் பரப்பப்பட்டது. ஆனால் அங்கு ஒரு சிறு சேதம் கூட கிடையாது. காவல் துறையினரே வாகனங்களை தீ வைத்து எரித்துள்ளனர். ஹிட்லர் பாராளுமன்றத்திற்கு தீ வைத்து விட்டு கம்யூனிஸ்ட்டுகள் மேல் பழி போட்டது போல தமிழக காவல்துறையினர் செயல்படுகின்றனர். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துப்பாக்கி சூட்டிற்கு பொறுப்பு ஏற்று பதவிவிலக வேண்டும். தமிழக அரசு ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவான அரசு. உச்சஅறங்கூற்றுமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதித்தாலும் தூத்துக்குடியில் ஆலையை இயங்க நாங்கள் விடமாட்டோம். கட்சி கொடி இல்லாமல் ஒரு லட்சம் மக்களை திரட்டி போராடுவோம். ஸ்டெர்லைட்க்கு எதிராக செயல்படுவதால் ஒவ்வொரு தேர்தலிலும் என்னை தோற்க வைக்க அந்த நிறுவனம் பணம் செலவழித்ததாக ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளது. தூத்துக்குடியில் நடைபெற்ற படுகொலைகளுக்கு காரணம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான். அதற்கு பொறுப்பேற்று, அவர் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும். இவ்வாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,802.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



