Show all

ஸ்டெர்லைட் நூறாவது நாள் போராட்டம்! 144தடையுத்தரவு; காவல்துறையினர் தடியடி; கண்ணீர் புகைகுண்டு வீச்சு

08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் குடிநீர் மாசு ஏற்பட்டு வேளாண்மை அழியும் தருவாயில் உள்ளது. மேலும் குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்டோருக்கு மூச்சு திணறல், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. 

இதனால் ஆலையை மூட வேண்டும் என கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வெளிநாடு வாழ் இந்தியர்களும் தங்களது எதிர்ப்பை காட்ட ஆங்காங்கே போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இந்தப் போராட்டம் இன்று 100ஆவது நாளை எட்டியது. இதனால் இன்று போராட்டத்தை தீவிரப்படுத்த முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

இந்தப் போராட்டத்துக்கு உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 18 கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிராம மக்கள் எந்தவழியில் வந்து முற்றுகையிட்டாலும் கைது செய்ய தூத்துக்குடியில் 2,000 காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றிய பகுதிகளில் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் 144 தடை உத்தரவை மீறி ஆயிரக்கணக்கானோர் பிரமாண்ட முற்றுகை பேரணியை நடத்தி வருகின்றனர். இதில் 18 கிராமங்களைச் சேர்ந்தோர் கலந்து கொண்டனர். 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். பதிலுக்கு பொதுமக்களும் காவல்;துறையினர் மீது கற்களை வீசினர். இதையடுத்து கண்ணீர் புகை குண்டும் வீசப்பட்டது. 

மக்களின் 100 போராட்டத்திற்கும் மதிப்பளிக்காத அரசு, மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்களுக்கான அரசுதானா? மக்களின் கோரிக்கையை ஏற்று மக்களைக் காப்பதற்கு யாரும் இல்லையா? மக்கள் இனி என்ன செய்துதான் விடிவைத் தேடப் போகிறோம்? வாழ்வா சாவா என்று பார்த்து விடுவோம்?  என்ற ஏக்கத்தோடு வீதியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். காவல்துறை விரட்டி விரட்டித் தாக்கிக் கொண்டிருக்கிறது. என்னதான் முடிவு என்று தெரியாமல் ஊடகத்தினர் படக்கருவிகளோடு மக்களையும் காவல்துறையினரையும் துரத்தி துரத்தி படமெடுத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழக அரசும் நடுவண் அரசும், 144 தடையுத்தரவு பிறப்பிப்பதையும் காவல்துறையை மக்கள் மீது ஏவிவிட்டு மக்களை அடக்க நினைப்பதையும் உடனடியாக கைவிட வேண்டும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,795. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.