கொரோனா உற்பத்திக்கு காரணமாக அமைந்தது சீனா. தமிழகத்தில் அது பரவுவதற்கு வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்கள் காரணமாக இருக்கிறார்கள். அவர்களின் அசட்டை மனநிலை, அடாவடி குறித்து அலுத்துக் கொள்கின்றனர் மக்கள். இந்த நிலையில் தமிழக நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரி பரவல் தடுப்பு நடவடிக்கையாக, வெளிநாடுகளிலிருந்து அண்மையில் தமிழகம் திரும்பியுள்ளவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டே ஆக வேண்டும் என்று தமிழக நலங்குத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இன்று 18 ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக, மாநில நலங்குத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது: கொரோனா தொற்று பாதிப்பை சமாளிக்க தமிழக அரசும், நலங்குத் துறையும் முழுவீச்சில் தயாராகி வருகிறது. இருப்பினும், பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி இந்தத் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த இயலாது. எனவே, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காலத்தில் பொதுமக்கள் முடிந்தவரை வீட்டைவிட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும். மிக மிக குறிப்பாக, அண்மையில் வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பியுள்ளவர்கள், மருத்துவர்களின் ஆலோசனைப்படி தங்களை வீட்டிலோ, மருத்துவமனையிலோ தனிமைப்படுத்தி கொண்டே ஆக வேண்டும். அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அத்துடன் அவர்களின் எல்லைக்கடவும் முடக்கப்படும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார். வெளிநாடுகளிலிருந்து அண்மைக் காலத்தில் தமிழகம் திரும்பிய 15,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இல்லை, இல்லை, எங்களுக்கு கொரோனா தொற்று எல்லாம் எதுவுமில்லை என்று அவர்கள் வெளியே நடமாடினால், அதனை தமிழக அரசு இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.