27,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த வேதியன்குடியைச் சேர்ந்தவர் ஆனந்தன் அகவை 55. இவரது மனைவி ஆராயி அகவை 52. இவருக்கு ஏற்கனவே 9 முறை பிரசவம் வீட்டிலேயே நடந்துள்ளது. இதில் ஒரு குழந்தை இறந்தே பிறந்துள்ளது. மீதமுள்ள 8 குழந்தைகளில் 4 பேருக்கு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் ஆராயி மீண்டும் கர்ப்பமானார். கர்ப்பமான ஆராயி, சிங்கவனம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் இருப்பதை கண்டறிந்தார். மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று ஆராயி சொந்த ஊர் திரும்பினார். ஆராயிக்கு வரும் சனிக்கிழமை பிரசவ நாள் என மருத்துவர்களுக்கு தெரியவந்தது. மருத்துவர் அய்யப்பன் தலைமையில் மருத்துவ குழுவினர் கடந்த கிழமை வேதியன்குடி சென்று ஆராயியை பரிசோதனை செய்தனர். குழந்தை நல்ல முறையில் பிறக்கவும், தாயின் உயிருக்கு எந்த ஆபத்து இல்லாமல் இருக்கவும் அவசர சிகிச்சை வாகனம் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேருமாறு அறிவுறுத்தினர். ஆனால் ஆனந்தன், தனது மனைவி ஆராயியை புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் தலைமறைவாகிவிட்டார். குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பயந்து மாயமாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மருத்துவ குழுவினர் மற்றும் வருவாய்த்துறையினர் ஆராயி மற்றும் அவரது கணவரையும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மருத்துவர் அய்யப்பன் கொடுத்த புகாரின்பேரில், நாகுடி காவல்துறையினர் வழக்கு பதிந்து ஆராயியை தேடி வருகின்றனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், ஆனந்தனுக்கும், அவரது மனைவிக்கும் 16 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது ஆசை. இதுவரை ஆராயிக்கு 9 பிரசவங்கள் அவரது வீட்டிலேயே நடந்துள்ளன. அதில் ஒரு குழந்தை இறந்த நிலையில் தற்போது 8 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொண்டால், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து விடுவார்கள் என்ற பயத்தில், ஆராயி அவரது கணவருடன் தலைமறைவாகிவிட்டார் என்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,877.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



