சென்னையில் நாளை முதல் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக நார்வே வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அம்மாடியோவ்! நார்வே வானிலை மையம் சொல்லுவது உண்மையாக இருக்க வேண்டுமே! 04,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடந்த இரண்டு ஆண்டுகளாக மழையில்லாமல் சென்னை உள்ளிட்ட இடங்கள் தவித்து போயுள்ளன. மேலுமாக அனல்காற்று, கத்தரி வெயில் ஒரு சேர வந்து மக்களை வாட்டி வதைத்து வந்தது. இதனால் மக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே வர வேண்டாம் என்றெல்லாம் கூட வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் மழை இல்லாததால் தண்ணீர் பஞ்சம் கோர தாண்டவம் ஆடி வருகிறது. தண்ணீர் பஞ்சத்தால் உணவகங்கள், தங்கும் விடுதிகள் மூடப்பட்டு வருகின்றன. அது போல் சில பள்ளிகளுக்கும் அரை நாள் விடுப்பு விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு மகிழ்ச்சி செய்தியாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருக்கிறது என்றும் அது போல் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை பெய்யும் என அறிவித்துள்ளது. மேலும், நாளை முதல் சென்னைக்கு 6 நாட்களுக்கு மழை என நார்வே வானிலை மையமும் தெரிவித்துள்ளது. நாளை மாலை 6 மணி முதல் 12 மணி வரை மழை பெய்ய தொடங்கும். தொடர்ந்து இந்த மழை வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை பெய்யும். பின்னர் நண்பகல் 12 மணி வரை வெயில் பின்னர் வானம் மேகமூட்டம் என மாறி மாறி மழையும் வெயிலும் இருக்கும். இப்படியாக சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் லேசான மழை பெய்யும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. குளிர்ச்சி மட்டுமே தரும் மழை, தண்ணீர் சிக்கல் எல்லாம் தீராது என்றும் தெரிவிக்கப்படுகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,188.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



