Show all

அங்கீகரித்துஅல்ல போலி மருத்துவராக! கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறும் திருத்தணிக்காசலம், தமிழக நலங்குத்துறையின் பார்வையில் பட்டிருக்கிறார்

கொரோனா நுண்ணுயிரித் தொற்றுக்கு மருந்து கண்டறிந்துவிட்டதாக திருத்தணிக்காசலம் என்பவர் நீண்ட நாட்களாக சமூக ஊடகங்களில் பேசிவருகிறார். அவருக்கான ஆதரவும் பெருகித்தான் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவர் மீது சட்டஅடிப்படையான நடவடிக்கை எடுக்கவிருப்பதாக தமிழக நலங்குத்துறை தெரிவித்துள்ளது. 

22,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா நுண்ணுயிரித் தொற்றுக்கு மருந்து கண்டறிந்துவிட்டதாக திருத்தணிக்காசலம் என்பவர் நீண்ட நாட்களாக சமூக ஊடகங்களில் பேசிவருகிறார். அவருக்கான ஆதரவும் பெருகித்தான் வந்து கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில் அவர் மீது சட்டஅடிப்படையான நடவடிக்கை எடுக்கவிருப்பதாக தமிழக நலங்குத்துறை தெரிவித்துள்ளது. அரசு அங்கீகாரம் பெறாத மருத்துவ நிலையம் நடத்திவரும் போலி மருத்துவர் திருத்தணிக்காசலம் என்பவர் மீது வழக்கு தொடுக்கவிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 

சமூக வலைதளங்களில் மட்டும் பேசுபொருளாக இருந்த அவர் தற்போது செய்தி ஊடகப் பேசுபொருளாகவும் ஆகிவிட்டார். ஆனால் தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட வகையாக இல்லாமல் எதிர்மறையாக. அதாவது கண்டுபிடிப்பாளராக இல்லாமல் போலி மருத்துவராக.

சென்னை, ஜெய்நகர், கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனை நடத்திவரும் க.திருத்தணிக்காசலம் கொரோனா நுண்ணுயிரிக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் இதழ்கள் மூலம் தவறான செய்தியை பரவவிட்டு, பொது மக்கள் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டு வருகிறார் என நலங்குத்துறை தெரிவித்துள்ளது.

நடுவண் மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வித் தகுதியோ, முறையான அங்கீகாரமோ, பதிவோ இல்லாதவர் என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவம் மற்றம் ஹோமியோபதித் துறை மூலம் சென்னை, காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என நலங்குத்துறை அறிவித்துள்ளது. 

மேலும் கோவிட்19 எனும் கொரோனா நுண்ணுயிரி குறித்து புலனம், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் பொது நலங்குத் துறை இயக்குநர் அல்லது மருத்துவக் கல்வி இயக்குநர் அல்லது ஊரக மருத்துவம், நலங்குப் பணிகள் இயக்குநர் அல்லது மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதியின்றி தகவல் பரப்புதல் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது, என்றும் தெரிவித்துள்ளது.

கொரோனா நுண்ணுயிரிக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறிய திருத்தணிகாசலம், அவர் கண்டறிந்த மருந்தின் மூலம், நோயாளியின் உடலில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதால், கொரோனாவில் இருந்து குணம் பெற முடியும் என்றார்.

அவரது மருந்து குறித்த கேள்விகள் எழுந்தபோது, அவர் கண்டறிந்த மருந்தில் நிலவேம்பு, வெள்ளை எருகு மற்றும் கருங்காக்காலி வேப்பட்டை மற்றும் சில மருந்துகளின் கலவையாக இருக்கும் என்றும் அவரது மருந்து நோயாளிகளின் சுயநோய்எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் என்பதால் குணம் பெறமுடியும் என்றார்.

மேலும், கொரோனா நுண்ணுயிரியால் பாதிக்கப்பட்டவர்களை ஒரே மருத்துவமனைக்கு மாற்றவேண்டும் என்றும் அவர்களுக்கு அரசு மருத்துவர்கள் சிகிச்சை தருவதோடு, அவர் கொடுக்கும் மருந்தையும் எடுத்துக்கொள்ளலாம் என்றார். அவர் பரிந்துரை செய்யும் மருந்தால் எந்த பின்விளைவும் வராது என்றும் கொரோனாவால் ஏற்படும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய பண்பு இரண்டு அல்லது மூன்று நாட்களில் மாறிவிடும் என்றார். 10 நாட்களில் இந்தியாவில் உள்ள அனைத்து கொரோனா நோயாளிகளையும் குணமாக்கிவிடமுடியும் என்றார்.

தான் அளித்த மருந்தை ஸ்விட்சர்லாந்தில் உட்கொண்ட ஒருவர் குணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவரது மருத்துவ படிப்பு குறித்த கேள்விகள் எழுந்தபோது, படிப்பிற்கும் கண்டுபிடிப்பிற்கு எந்த சம்பந்தமும் இல்லை. கடந்த 70 ஆண்டு காலத்தில், இந்தியா முழுவதும் சித்த மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வுகள் நடத்தி எந்தவிதமான மருந்துகளையும் இவர்கள் கண்டறியவில்லை. நான் சித்த மருத்துவக்கல்லூரியில் படிக்கவில்லை. ஆனால் என் மனைவி சித்த மருத்துவத்தில் முனைவர் கல்வி படித்திருக்கிறார். சித்தர்கள் யாரும் கல்லூரியில் படித்தவர்கள் இல்லை. அகத்தியர், போகர், புலிப்பாணி சித்தர்கள் யாரும் இதுபோன்ற கல்லூரியில் படிக்கவில்லை, என்றும் காணொளியில் பேசியுள்ளார்.

(பாரம்பரிய மருத்துவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள், குணம் அளிக்கும் மருந்துக்களும், வருமானமும் மற்றும் கிராம மக்களிடம் நம்பிக்கையும் பெற்றுத்தரும் தங்கள் மருத்துவத்தை கைவிடவும் முடியாமல், அடிப்படை கல்வித்தகுதி இல்லாததால், மருத்துவத் துறையிலும் சான்றிதழ் ஏதும் பெறமுடியாமல், போலி மருத்துவர்களாகவே அங்கிகரிக்கப்பட்டு தொழில் செய்தும், அவ்வப்போது வழக்கிற்கு உள்ளாகியும் வருகின்றார்கள். 

ஒருசிலர் தங்கள் குடும்பத்தினர் யாரையாவது குறைந்தபட்ச மருத்துவக்கல்வி தகுதி எதையாவது பெறவைத்து, அவர்கள் பெயரில் தொழில் செய்து கொண்டிருக்கின்றார்கள். இந்த சூழ்நிலையைத் தக்கவைத்துக் கொண்டு சில தனியார் மருத்துவ நிறுவனங்கள் ஏதோ ஒரு படிப்பைத் தந்து சான்றிதழையும் தந்து கொண்டிருக்கின்றது. பெரும்பாலும் சிக்கலின் போது அந்தச் சான்றிதழ் அங்கீகரிக்கப் படுவதில்லை. பொதுவாக இது பாரம்பரிய மருத்துவர்களுக்கு- குணமளிக்கும் மருத்துவம் கைவசம் இருந்தும் அங்கீகாரம் இல்லாத நிலையாகும். 

நண்பன் திரைப்படத்தில் விஜய் மூலமாக இயக்குநர் சங்கர் சான்றிதழ் தேவையில்லை திறமை இருந்தால் போதும் என்று இளைஞர்களுக்கு அறிவுறுத்த முயன்றிருப்பார். ஆனால் தமிழகப் பாரம்பரிய மருத்துவர்கள் நிலையில் அது சாத்தியமில்லை என்பதை உறுதிப்படுத்துவதாகிறது.)

பள்ளிக்கூடத்தில் இருந்து விரட்டப்பட்ட எடிசன்தான் ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளைச் செய்தார் என்றார். குறிப்பாக அவர் பரிந்துரை செய்த மருந்தை மதித்தால் சீனா பிழைத்துக்கொண்டது என்றும் இந்தியாவில் அவரது மருந்தை பயன்படுத்தவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

அவரது காணொளியில், இந்தியாவில் கொரோனா நுண்ணுயிரியால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறப்புப் பிரிவுக்கு என்னை விடுங்கள். அதனால் என் உயிருக்கு வரும் ஆபத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஒரே நேரத்தில் அங்குள்ள அனைத்து நோயாளிகளையும் தர முடியாது என்றாலும் கூட எனக்கு 5 நோயாளிகளைத் தாருங்கள். 48 மணி நேரம் காலஅவகாசம் கொடுங்கள். அந்த மருந்துகளை நான் சாப்பிட்ட பின்பே அந்த நோயாளிகளுக்குக் கொடுக்கிறேன். என்னிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகளை 48 மணிநேரம் கழித்து பரிசோதித்து பாருங்கள். அவர்கள் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்தால் அனைத்து நோயாளிகளையும் என்னிடம் தாருங்கள். நான் கூறிய மருந்தை தற்போது சீனா பயன்படுத்திக்கொண்டிருக்கிறது, என்றும் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.