Show all

சீமானும் தமிழக முதல்வர் ஆகலாம்! தமிழ்மக்கள் எதிர்பார்க்கும் சிலதகுதிகளை சீமான் எட்ட வேண்டும்.

தமிழ்மக்கள் எதிர்பார்க்கும் சில தகுதிகளை நிறைவு செய்தால், யாரும் தமிழக முதல்வர் ஆகலாம். இதுவரை தமிழக முதல்வர்களாய் இருந்தவர்களிடம் என்னனென்ன பொதுவாக இருந்த தகுதிகள் என்று பட்டியல் இட்டாலே தமிழகத்திற்கு முதல்வர் ஆக விரும்புகிறவர்கள் தமிழக முதல்வர் பதவியை வென்றெடுக்கலாம். அந்த வகையில் அதிகமான பாராட்டுக்கும் அளவில்லா விமர்சனத்திற்கும் உரிய சீமான் தமிழக முதல்வர் ஆக என்ன செய்யலாம்.

03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீமான் கூட்டங்களை கேட்கும் போதும் சரி, சிமான் பேட்டிகளைத் தொலைக்காட்சிகளில் பார்க்கும் போதும் சரி. இந்த மாதிரி இவ்வளவு தகவல் புலமை உள்ள அரசியல் தலைவர்கள் தற்போது யாரும் தமிழகத்தில் இருப்பதாகத் தெரியவில்லையே என்றே தோன்றும். 

ஆனால் சீமானுக்கு அங்கீகாரம் தரலாம் என்று நாம் நினைத்த செய்தியை பொதுவெளியில் பேசும் போது, நான்கு பேர்கள் நான்கு விதமாகப் பேசுவார்கள். ஏன் இவர்கள் சீமான் பேச்சை வலையொளியில் கூட கேட்க மாட்டார்களா? சீமான் பேட்டியைத் தொலைக்காட்சிகளில் பார்க்க மாட்டார்களா என்று நமக்குத் தோன்றும். அப்புறம் நாமும் நாம் முன்னெடுத்த செய்தியில் இருந்து மெல்ல நழுவி விடுவோம். இது சீமான் வளர்வதற்கு இருக்கிற ஒரு வகையான தடை. 

தற்போது, தமிழகத்தில்: ஸ்டாலின், தினகரன், சீமான், கமல்காசன் ஆகியவர்கள் மட்டுந்தாம் அடுத்த முதல்வர் தளத்தில் வைத்துப் பேச தகுதியுள்ளவர்கள்.  எடப்பாடியும், பன்னீரும் ஆட்சியைக் கைப்பற்றியது ஒரு விபத்து. அவர்களை இனி தமிழக முதல்வர் என்ற தளத்தில் வைத்தெல்லாம் பார்க்கவே முடியாது. 

நேற்று ஒருவர் இருந்தார் அவர் விஜய்காந்த். விஜய்காந்திடம் ஆட்சியைத் தர தமிழ்மக்கள் அணியமாகவே இருந்தார்கள். தேமுதிகவால்தான் அதை அறுவடை செய்ய இயலாமல் போனது.

இதுவரை தமிழகத்தை ஆண்ட முதல்வர்கள் யார்? பட்டியலைப் பார்ப்போமா? விபத்தாக தமிழக முதல்வர்களாக சில பல நாட்கள் பதவியேற்ற பன்னீர், ஜானகி, நெடுஞ்செழியன் ஆகியவர்களை எல்லாம் விட்டு விடுவோம்.  

மற்றபடி 1.காமராசர் 2.பக்தவச்சலம் 3.பேரறிஞர்.அண்ணா 4.மு.கருணாநிதி 5.எம்.ஜி.இராமச்சந்திரன் 6.செயலலிதா இந்த ஆறுபேர்கள்தாம் தமிழக முதல்வர்களாக தமிழ் மக்களால் அங்கீகரிக்கப் பட்டவர்கள். இந்த ஆறுபேருமே கட்சியை நிறுவனமாகக் கொண்டிருந்தவர்கள். கட்சிக் கிளைகளை பட்டி தொட்டியெங்கும் வைத்திருந்தவர்கள். 

அடுத்து நமது பட்டியலில் இருக்கிற 1.ஸ்டாலின், 2.தினகரன், 3.சீமான், 4.கமல்காசன்  இதில் ஸ்டாலினுக்கு நிறுவனமாக கட்சியும் இருக்கிறது. பட்டி தொட்டியெங்கும் கட்சிக் கிளைகளையும் வைத்திருக்கிறார்கள்.

அடுத்து தினகரனுக்கு நிறுவனமாக கட்சியும், பட்டி தொட்டியெங்கும் கட்சிக் கிளையும் தேர்தல் முடிவுக்குப் பிறகு எளிதாக வசமாகி விடும்.
 
அடுத்து கமல்காசன், மற்றும் சீமான். சீமானுக்கு நிறுவனமாக கட்சி இன்னும் அமையவில்லை. ஏனென்றால் சீமானின் நாம்தமிழர் கட்சியில் தயக்கமில்லாமல் யார்வேண்டுமானாலும்  நுழைந்து விட முடியாது. நாம் தமிழர் கட்சியின் திட்டவட்டமான கொள்கைத் திட்டம் சிலரை சல்லடை போட்டு சலித்து வெளியேற்றும். 

அடுத்ததாக பட்டி தொட்டியொங்கும் கட்சி கிளை என்கிற இலக்கை நாம்தமிழர் கட்சி இன்னும் முழுமையாக அடையவில்லை. எந்த இடத்தில் போய் சீமானை அங்கிகரித்துப் பேசினாலும், நாம் நழுவியோ, அல்லது கோவித்துக் கொண்டோ திரும்புகிற நிலை இருக்கிறது. அந்த நிலையை அப்புறப் படுத்த நாம்தமிழர் கட்சி இன்னும் விரிவான கருத்துப் பரப்புதலை முன்னெடுக்க வேண்டும். 

எந்தக் கட்சியை விடவும் நாம்தமிழர் கட்சியிடம், தமிழ்மக்கள் கூடுதலாக எதிர்பார்க்கும் நிலை இருக்கிறது. காய்த்த மரத்திற்கு கல் ஈடு என்பதைப் போல கொள்கையில் வலுவாக இருந்தால் கேள்விகள் அதிகமாகவே இருக்கும். அதிமுகவை விட திமுகவிடம் தமிழ்மக்களுக்கு கொஞ்சம் எதிர்பார்ப்பு அதிகமாகவே யிருக்கும்.

நாம் தமிழர்கட்சியை மாற்று இல்லாத கட்சியாக தமிழ்மக்கள் அங்கீகரிக்க அணியமாக இருக்கிறார்கள். நாம்தமிழர் கட்சியிடம் நிறைய தமிழ்மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நாம் தமிழர் கட்சி ஆட்சியில் அமரும்போது- காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகள் தமிழகத்தில் செல்லாததாக்கப் படவேண்டும். அதையெல்லாம் நிறைவேற்றும் கடமையை நாம்தமிழர் கட்சியிடம்தாம் தமிழ்மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சீமான் இதற்கெல்லாம் தகுதி அடையும் போது அவர் தமிழக முதல்வராவதற்கு எந்தத் தடையும் இருக்காது. 

கமல்காசனுக்கு இவ்வளவு தேர்வெல்லாம் இருக்காது. விஜய்காந்த் போல கட்சியை வலுப்படுத்தினாலே அவருக்கு தமிழக முதல்வர் ஆவதற்கான தகுதி கிட்டிவிடும். ஸ்டாலினுக்கு மாற்றாக கமலும், தினகரனும் அமைய வாய்ப்பு இருக்கிறது. 

நாம்தமிழர்கட்சி தகுதி பெறும் போது- ஸ்டாலின், தினகரன், கமல் இவர்கள் எல்லாம் சீமானுக்கு இணையாக நிற்க முடியாது. ஏனென்றால், அவர்கள் நல்லாட்சி செய்பவர்களாகக் கூட இருக்கலாம். உலக இனங்கள் எல்லாம் இலட்சிய ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. தமிழகமும் இலட்சிய ஆட்சியால் கவரப்படும். அப்போது நாம்தமிழர் கட்சி மட்டுமே அந்தத் தகுதிக்கு உரியதாக, 'தமிழர் அடிப்படையைக் காப்பவர்களாக' காங்கிரசையும், பாஜகவையும் செல்லாததாக்கி படிப்படியாக நாம்தமிழர் கட்சியினர் வளர்ந்திருப்பார்கள். 

காங்கிரசையும், பாஜகவையும் தமிழகத்தில் செல்லாததாக்காத வரை சீமானால் தகுதி பெற முடியாது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,155.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.