Show all

சசிகலாவால் மட்டுமே அ.தி.மு.க.வை வழி நடத்த முடியும்: தினகரன்

22,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலையில் தினகரனின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் கலந்து கொண்டு அவர் பேசும்போது கூறியதாவது:

தமிழக மக்களின் நலனுக்கு எதிரான பல திட்டங்களை ஜெயலலிதா தடுத்து நிறுத்தி வைத்தார். ஆனால் இப்போதைய தமிழக அரசு எங்கள் 18சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ததைப் போல, நடுவண் அரசு தங்கள் ஆட்சியைக் கலைத்து விட்டால், நான்கு ஆண்டு காலம் ஆளும் வாய்ப்பு வீணாய் போய் விடுமே என்று நடுவண் அரசிடம் பயந்து கொண்டு அந்த திட்டங்களை எல்லாம் தமிழகத்தில் செயல்படுத்தி, தமிழக மக்களுக்கு எதிராக, மக்கள் விரோத அரசாக செயல்பட்டு வருகிறது. நடுவண் அரசின் கைக்கூலியாகவும், பினாமி அரசாகவும் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

போக்குவரத்து கழகத்தின் நட்டத்தினை குறைக்க வேண்டுமானால் நடுவண் அரசு டீசலுக்கான சுங்க வரியை குறைத்தால் போதும், போக்குவரத்து கழகம் லாபத்தில் செயல்படும். இதனை தமிழக அரசு தான் நடுவண் அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளின் துயரங்களை உணர்ந்த ஜெயலலிதா உச்சஅறங்கூற்று மன்றம் சென்று காவிரி நடுவர் மன்றம் அமைத்து அதன் மூலம் சட்டப் போராட்டம் நடத்தி காவிரியில் நமக்கு உரிய தண்ணீரை பெற்று தந்தார்.அதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நமக்கு தண்ணீர் கிடைத்து வந்தது. ஆனால் தற்போது காவிரி கழிமுகத்தில் நெற் பயிர் தண்ணீர் இல்லாமல் கருகி வருகிறது. தமிழக முதல்வர் நமக்கு உரிய தண்ணீரை அறங்கூற்றுமன்றம் மூலம் கேட்டு பெறாமல், கர்நாடக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுக் கொண்டு இருக்கிறார். தமிழக அரசு திட்டங்களில் நடுவண் அரசு பாராமுகமாக இருக்கிறது.

நடுவண் அரசின் வரவு-செலவு தமிழக வளர்ச்சிக்கு ஏதும் இல்லை. தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 7½ கோடி மக்களின் விருப்பத்தினால் தான் இரா.கி.நகரில் என்னை வெற்றி பெற வைத்துள்ளனர்.

அ.தி.மு.க.வை சசிகலாவால் மட்டுமே தொடர்ந்து வழிநடத்த முடியும். இப்போது மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். மக்கள் ஏமாற மாட்டார்கள். மக்களுக்கெதிரான இந்த அரசு விரைவில் அகற்றப்படும். அப்போது ஜெயலலிதாவின் அரசு அமையும். அந்த அரசு அமையும் போது சுவாமிமலையில் பேருந்து நிலையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கும்பகோணம் தொகுதியில் அசூர், கும்பகோணம் காந்திபூங்கா, தாராசுரம், பட்டீஸ்வரம், மருதாநல்லூர், செட்டி மண்டபம் ஆகிய இடங்களுக்கு சென்று தினகரன் பேசினார். இதில் ரெங்கசாமி சட்டமன்ற உறுப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,688

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.