Show all

இலக்கை தீர்மானிப்பதில் வல்வில்ஓரி போல, அதிமுக மீட்பே குறிக்கோளாய் தினகரன் அணி

22,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களில் தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்ததால் அவர்கள் 18 பேரையும் சட்டப் பேரவைத் தலைவர் தகுதி நீக்கம் செய்தார்.

இதை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இருதரப்பு விசாரணையும் முடிந்துள்ள நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அனேகமாக ஒரு கிழமைக்குள் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்ச் செல்வனிடம் கேட்டபோது இதுபற்றி அவர் கூறியதாவது:

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்றத்திற்குள் வரும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லாமல் போய்விடும்.

தற்போது சட்டமன்றத்தில் அ.தி.மு.க.வுக்கு பேரவைத் தலைவரையும் சேர்த்து 115 எம். சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுதான் உள்ளது. தி.மு.க.வுக்கு-89, காங்கிரசுக்கு-8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-1, தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 3 பேர் உள்ளனர்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளே வரும் பட்சத்தில் முதல்- அமைச்ச ர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

அப்போது நாங்கள் எடப்பாடி பழனிசாமி -ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கு கண்டிப்பாக ஆதரவு கொடுக்க மாட்டோம். இவர்கள் மட்டுமல்ல, அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, வீரமணி இல்லாமல் வந்தால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்போம். அப்போது முதல்- அமைச்சராக தினகரனை முன்னிறுத்துவோம்.

18 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் தொகுதியில் நாங்கள் இடைத்தேர்தலைச் சந்திப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

அ.தி.மு.க.வில் இப்போது பதவியில் இருக்கும் பல பேர் சசிகலா அணியினரால் நியமிக்கப்பட்டவர்கள்தான். சட்டமன்ற உறுப்பினர்களைப் பொறுத்த வரை யாரும் ஆட்சியை இழக்க தயாராக இல்லை.

18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வந்தாலும் ஆட்சி கவிழ வாய்ப்பில்லை. ஆட்சிக்காக சமரசம் ஆகி விடுவார்கள்.

அப்போது முதல்- அமைச்சர் யார்? என்பது மட்டும்தான் பிரச்சினையாக இருக்கும். அதையும் பேசி சமரசமாகி விடுவார்கள். எனவே யாரும் ஆட்சியை இழக்க விரும்ப மாட்டார்கள்.

சசிகலா தரப்பு அணியினர்தான் இப்போதும் ஆட்சியை நடத்துகிறார்கள். தினகரனை சிலர் வெறுக்கிறார்கள். அவ்வளவுதான்.

கட்சியைப் பொறுத்த அளவில் இப்போது பதவியில் உள்ள பலர் ராவணன், கலியமூர்த்தி, ராமச்சந்திரன், மிடாஸ் மோகன், நடராஜன், பழனிவேலு என சசிகலாவின் ஆட்கள் மூலம்தான் பதவி பெற்று நீடிக்கிறார்கள்.

ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆட்கள் யாரும் இன்னும் புதிதாக நியமனம் செய்யப்பட வில்லை. புதிய நிர்வாகிகளை நியமனம் செய்த பிறகுதான் கட்சியில் யார் ஆட்கள் அதிகம் என்பது தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,688

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.