சென்னை உயர் அறங்கூற்று மன்றம் சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டத்தை எதிர்த்து இயற்கையை பாதுகாக்கும் பல்வேறு போராட்டங்களில் மாணவி வளர்மதி ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள பெண்கள் அரசு கலைக் கல்லூரி அருகில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைக் கைவிட நடுவண் மாநில அரசுகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த அழைப்பு விடுத்து துண்டு பிரசுரங்களை விநியோகித்தார். இதுதொடர்பாக சேலம் காவல்துறையினரால் சூலை 13அன்று வளர்மதி கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டதாகவும், மாணவர்களைத் தூண்டிவிட்டு கிளர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறி சூலை 17அன்று வளர்மதியைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதனையடுத்து வளர்மதி கோவை நடுவண் சிறையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். இதனிடையே தனது மகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தந்தை மாதையன் ஆகஸ்ட் 2அன்று சென்னை உயர் அறங்கூற்று மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் வளர்மதி மீது குண்டர் சட்டம் போடப்பட்டது குறித்து ஆகஸ்ட் 7 அன்றுக்குள் விளக்கமளிக்குமாறு சேலம் மாநகர காவல் ஆணையருக்கு உயர் அறங்கூற்று மன்றம் எச்சறிக்கை அனுப்பியிருந்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்று உயர் அறங்கூற்றுமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அறங்கூற்றுவர் பொன்னுசாமி கலையரசன் உள்ளிட்ட இரு அறங்கூற்றுவர்கள், மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். உயர் அறங்கூற்றுமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து வளர்மதி சிறை நடைமுறைகள் முடிவடைந்து வியாழக்கிழமையோ அல்லது வெள்ளிக்கிழமையோ சிறையில் இருந்து வெளியே வருவார் என தெரிகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



