Show all

சல்லிக்கட்டு போராட்டம் போல் தீர்வு வரை, தொடருமா இந்த நீட் எதிர்ப்புப் போராட்டம்

3வது நாளாக தொடரும், நீட் தேர்வுக்கு எதிராகவும், மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் சென்னையில் போராட்டம்.

பூக்கடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வால்டாக்ஸ் சாலை அரசு பொது மருத்துவமனை எதிரில் தமிழ்வழி கல்வி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அதன் ஒருங்கிணைப்பாளர் சின்னப்பா தமிழர் தலைமையில் நீட் தேர்வுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

இதில் தமிழ் தேச மக்கள் கட்சி பொதுச் செயலாளர் தமிழ் நேயன், தமிழ் தேச குடியரசு இயக்கம் செந்தமிழ்வாணன், தலைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த நந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பாரிமுனையில் அகில இந்திய மாணவர் கழகம் சார்பில் சென்னை மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடச் சென்ற அவர்களை வடக்கு கடற்கரை காவல்துறையினர் கைது செய்து மாலையில் விடுவித்தனர். முன்னதாக போராட்டத்தை தடுக்கும் வகையில் போர் நினைவுச் சின்னம் முதல் தலைமைச் செயலகம் அருகே உள்ள சுரங்கப்பாதை வரை ராஜாஜி சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இயல்பு நிலை திரும்பிய பிறகு வாகனங்கள் வழக்கம்போல் இயங்கின.

புதுப்பேட்டையில் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்தவர்கள், அதன் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் அகமது அலி தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், பகுதி செயலாளர் சுகுமார் தலைமையில் மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடுவண் அரசு அலுவலகங்கள், பாஜக அலுவலகம், மெரினாகடற்கரை ஆகிய இடங்களில் காவல்துறையினர் அதிக அளவில் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

கிழக்கு தாம்பரம் சென்னை கிறித்துவ கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் நேற்று வேளச்சேரி சாலை, ஜிஎஸ்டி சாலையில் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.

இதேபோல் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், வள்ளியம்மை பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஜிஎஸ்டி சாலை பொத்தேரியில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இதில்,

‘ஆந்திர மாநிலத்தில் உள்ளது போன்று அந்த மாநில மாணவர்களுக்கு, அரசு கல்லூரிகளில் வாய்ப்பளிக்கும் 371-டி சட்டப்பிரிவை, தமிழ்நாட்டிலும் அமல்படுத்த வேண்டும். தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவுக்கு நீதி வழங்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

குன்றத்தூர் அடுத்த கோவூரில் உள்ள ஜோசப் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போரூர் - குன்றத்தூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

இவ்வாறு தமிழகம் முழுவதும், தன்னார்வமாக மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எங்கே சல்லிக்கட்டு போராட்டம் போல் தீர்வு வரை, தொடருமோ இந்த நீட் எதிர்ப்புப் போராட்டம் என்று அச்சத்தில் விழிபிதுங்கி நிற்கிறது அரசு.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.