Show all

கேட்காமல் காவல்தெய்வமாக விளங்கிய வீரப்பன்! பாதுகாப்பு முன்னெடுப்புக்கு பலகட்சிகளில் அடைக்கலமாகும் பிள்ளைகளும், மனைவியும்

தமிழகத்தின் காவல்தெய்வமாக விளங்கிய வீரப்பனின் பிள்ளைகளும், மனைவியும் பாதுகாப்புக்காக ஏறாத படியெல்லாம் ஏறி அல்லல்படுகின்ற, சந்தணம் மணக்கும் அரசியல் இந்தியாவிற்கு சொந்தமானது. அடைக்கலம் தேடும்- வீரப்பனின் மனைவிக்கு தமிழ் அமைப்புகள், இளைய மகளுக்கு விடுதலைசிறுத்தைகள் கட்சி, மூத்த மகளுக்கு நேற்றிலிருந்து பாஜக.

11,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பெயர் மட்டும் சந்தணக்கடத்தல் வீரப்பன். சந்தணக் கடத்தலில் வாழ்வு பெற்றதெல்லாம் இன்று வரை பெயர் வெளிவராத அரசியல்வாதிகள். ஆனால் வாழ்வின் முழுப்பகுதியும் காட்டுக்குள்ளாகவே கழிந்தது வீரப்பனுக்கு. அவர் செய்த வேலைகளோ, அவர் வாழ்ந்த காட்டுப் பகுதியைச் சுற்றியிருந்த கிராமமக்களுக்குக் காவல் தெய்வமாக விளங்கியது. தமிழக மக்களுக்கு காவிரி மேலாண்மை வாரியமாக, ஆண்டாண்டுக்கு முறையாக நீர் பெற்றுத்தருவதற்கு அவரின் வீரத்தையும் துப்பாக்கியையும் முன்னெடுத்தது.

காட்டுக்குள் சென்று விறகு வெட்டி பிழைக்கும் அப்பாவி மக்களை வனத்துறை அதிகாரிகளும், வீரப்பன் தேடல் காவல்துறை அதிகாரிகளும் பாலியல் தொல்லைகளுக்கும், ஆட்டுக்கறி சமைத்துப் போடு என்று அதிகாரத் தொல்லைகளுக்கும் உட்படுத்தியபோது வீரப்பனின் துப்பாக்கி அவர்களை விரட்டி அடித்தது. 

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு முறையாக நீர் பெற்றுத் தருவதற்கு அவர் வாழ்ந்திருந்த காலம் வரை காவேரி மேலாண்மை வாரியமாக அவரின் துப்பாக்கியும் வீரமும் பயன்பட்டன. பல்வேறு தமிழ் அடிப்படை அமைப்புகளும் அவரின் வீரத்தைக் கொண்டாடின.

எம்ஜியார் அவர்கள் தமிழக முதல்வராக இருந்த வரை, எதற்காக வீரப்பனைப் பிடிக்க வேண்டும் என்று அசட்டை காட்டினார். செயலலிதா கெத்து காட்டுவதற்காக, வீரப்பனை பிடிக்கும் முயற்சியை முன்னெடுத்தார். செயலலிதா அனுப்பிய காவல்துறையினரோ, வீரப்பன் காட்டுப் பகுதி மக்களை மிரட்டி ஆடுபிடித்து கொண்டு வந்தார்கள். ஒரு காவல்அதிகாரிக்கு மேட்டூரில், ஆடு திருடி….. என்றே பெயர் விளங்கியது. காவல்துறையினர் உள்ளாட்களை வைத்து, வீரப்பனுக்கு வஞ்சகமாக நஞ்சு கொடுத்து கொலைசெய்து விட்டு, சுட்டுப்பிடித்ததாக நாடகம் போட்டு விருதெல்லாம் பெற்றுக் கொண்டார்கள்.

வீரப்பனின் மரணத்திற்குப் பிறகு அவர்கள் குடும்பத்தாருக்கு வீரப்பன் பணமெல்லாம் எங்கே என்பன போன்ற பல்வேறு கட்டமைப்பு வழக்குகளில் இருந்து தற்காத்துக் கொள்ள அரசியல்வாதிகளின் ஆதரவு தேவைப்பட்டது. இன்று வரை தேவைப்படுவதாக இருக்கிற நிலையில் வீரப்பன் மனைவிக்கு:- வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் சட்ட உதவி வழங்கிய தமிழ் அமைப்புகளின் ஒத்துழைப்போடு, வீரப்பனின் மனைவி தொடங்கிய தனி இயக்கமான, மண் காக்கும் வீரத்தமிழர் அமைப்பு. தற்போது கலைமுதுவர் (எம்.ஏ) ஆங்கிலம் படித்து வரும் இரண்டாவது மகள் பிரபாவதிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

தற்போது வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் மூத்தமகள் வித்யாராணிக்கு வழக்கறிஞர் தொழில், கிறித்துவக் கணவர், ஆங்கில ஆசிரியர் பதவி இவைவெல்லாம்கூட பாதுகாப்புக்கு போதா நிலையில், தற்போது பாஜகவில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் தேசியத்தலைவர் முரளிதரராவ் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் நேற்று இணைந்துள்ளார்.

தமிழகத்தின் காவல்தெய்வமாக விளங்கிய வீரப்பனின் பிள்ளைகளும், மனைவியும் பாதுகாப்புக்காக ஏறாத படியெல்லாம் ஏறி அல்லல்படுகின்ற  சந்தணம் மணக்கும் அரசியல், இந்தியாவிற்கு சொந்தமானது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.