Show all

முயற்சிகள் அனைத்தும் தோல்வி- மூடப்படாத ஆழ்துளைகிணற்றால் சிறுவன் சுர்ஜித் பலியானான்! பொறுப்பின்மை தந்த சோகம்

ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்த குழந்தை சுர்ஜித்தின் உடல் மணப்பாறை பாத்திமாபுதூர் கல்லறையில் காலை சுமார் 8.25 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நேற்று நள்ளிரவு 2.25 மணி: வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், வெள்ளிக்கிழமை மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் குழந்தை தவறி விழுந்தது. 80 மணி நேரத்துக்கு மேலாகத் தொடர்ந்த மீட்பு முயற்சி தோல்வி அடைந்தது. தனியார் மீட்புக் குழுக்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழு ஆகியவை குழந்தையை மீட்க முயற்சி கொண்டன. இந்நிலையில், ஆழ்துளைக் கிணற்றில் வாடை வருகிறது. அதனால் உடலை மீட்கும் நடவடிக்கை குறித்து கூறப்படும் என்றார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 அகவை குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். குழந்தையை மீட்க பல்வேறு மீட்புக்குழுவினர் தொடர்ந்து முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை.

சுர்ஜித்தை ரிக் இயந்திரத்தின் மூலம் மீட்கும் முயற்சி ஒருபுறம் நடைபெற்று கொண்டிருக்கும் போது சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணறு சுற்றி உள்ள இடங்கள் அனைத்தும் காவல்துறையினர்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

மேலும் ஆழ்துளை கிணறு அருகே அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவ குழுவினர், மற்றும் மீட்பு குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருவது அந்த இடத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், சிறுவன் சுர்ஜித் உயிரிழந்ததாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து சிறுவனின் உடல் பல்வேறு முயற்சிக்கு மத்தியில் தீயணைப்பு மற்றும், மீட்புபடையினரால் மீட்கப்பட்டது.  பின்னர் மீட்பு படையினர் உதவியுடன் அரசு சடுதிவண்டி மூலம் சிறுவனின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து அரசு அதிகாரிகள், மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் பிற அமைச்சர்கள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று உடற்கூறாய்வை  விரைந்து முடிக்க ஆணை பிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையை சுற்றி காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டனர்.

சிறுவன் சுர்ஜித் உடல் சில மணிநேரங்களில் பிரரேத பரிசோதனை நிறைவடைந்தது.  அதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்ளிட்ட அமைச்சர்கள் சிறுவன் சுர்ஜித்க்கு மாலை செலுத்தி தங்களது அஞ்சலியை செலுத்தினர்.  பின்னர் சிறுவன் சுர்ஜித் உடல் சடுதிவண்டியில் ஏற்றப்பட்டு அவனது சொந்த ஊரான நடுக்காட்டுப்பட்டியில் உள்ள பாத்திமாபுதூர் கல்லறை தோட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு காலை சுமார் 8.25 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சடுதிவண்டி செல்லும் வழி நெடுங்கிலும் மக்கள் காத்திருந்து சிறுவன் சுர்ஜித் உடலுக்கு தங்களது அஞ்சலியை செலுத்தினர்.  இதனிடையே சுர்ஜித்தின் தாய் மற்றும் அவனது குடும்பத்தினர் அனைவரும் கல்லறை தோட்டத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.  பின்னர் அவனது பெற்றோரிடம் குழந்தையின் உடல் ஒப்படைக்கப்பட்டது. காலை சுமார் 8.25 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,320.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.