11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி தொழில் வளாகத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி இந்த மாவட்ட மக்கள் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சென்னை உயர்அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளை, நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டது. அறங்கூற்று மன்ற உத்தரவைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. பகிர்வுத்தானிகள், சிறுபேருந்துகள் ஓடாததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாலையில் விவிடி.சிக்னல் அருகில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை விரிவுபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் உள்ள உரிமையாளரின் வீட்டின் முன்னால் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை விரிவுபடுத்த எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். மேலும் கண்டனச் செய்திகள் அடங்கிய பதாகைகளையும் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,737
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



