ஐந்திரக்காப்புக்குறி, ஓம், பிள்ளையார்சுழி, கடவுள் ஆகியவை பேரளவான புழக்கத்தில் இருக்கின்ற போதும், அவைகள் குறித்த உலகினரின் பார்வை, இடுகுறியும் புனைவுமாகப் பேணப்பட்டு வருவது ஏன் என்கிற தேடலில், ஐந்திரக்காப்புக்குறி குறித்த தெளிவை முன்னெடுப்பதற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. ஐம்பொழுது: ஆற்றங்கரை தேடி அலைந்த நாடோடி வாழ்க்கையையே ஒட்டுமொத்த உலகினரும் முன்னெடுத்திருந்த காரணத்தால், ஒவ்வொரு கூட்டமும் ஒற்றைத் தலைமையை முன்னிறுத்தியே நடைபோட்ட உலகினரின் சார்புப் போக்கால், அவர்களின் அடிப்படை, உலகம் யாரோயொரு ஒற்றைப்படைப்பாளியால் உருவாக்கப்பட்டது என்பதுபோன்ற, தனிஒற்றையை முதன்மைப் படுத்துகிற போக்காகவே அமைகிறது. அந்தத் தனிஒற்றையை முதன்மைப் படுத்துகிற போக்கிலும், இரண்டாவதைப் புரிந்து கொள்ள முயலாத ஆதிக்கமும், பாகுபாடும் ஆன, பாகுபாட்டியல் கோட்பாடும், அதில் பாதிக்கப்படுகிற இரண்டாவதின் உரிமைக்கான தொடர் போராட்டம் என்கிற முரண்பாட்டுக் கோட்பாட்டிற்கும் இடையிலான எதுஅந்த ஒற்றை? என்கிற போரியல் வாழ்க்கையாக இன்றும் தொடர்கிறது உலகினரின் வாழ்க்கை. மதங்களும், ஒற்றைமுதலாளித்துவமும், பாகுபாட்டுக்கோட்பாட்டில் இயங்குகின்றன. அவைகளுக்கு எதிரான இயல்அறிவும் (சயின்ஸ்), மார்க்சியமும் முரண்பாட்டியல் கோட்பாட்டில் இயங்குகின்றன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று, தோன்றிய இடத்திலேயே தொடர்ந்து, வாழத்தலைப்பட்டு, உலகில் நிலைத்த வாழ்க்கையை முன்னெடுத்த முதலாவது இனமான தமிழினம் உலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை நாவலந்தேயம் என்கிற மண்ணில் நிலைத்த வாழ்க்கை மேற்கொண்ட காரணம்பற்றி, தமிழினத்தின் கோட்பாடு ஆகிய தமிழியல், இரண்டேஅடிப்படை என்கிற வகைப்பாட்டுக் கோட்பாடாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. ஓர்மைக்கோட்பட்டிற்குச் சொந்தக்காரர்களான உலகினரும், இருமெய் கோட்பாட்டிற்குச் செந்தமான தமிழினமும், சந்திக்கும் வாய்ப்பை உருவாக்கியது தமிழினம் முன்னெடுத்த கடல்வழி வணிகமே. உலகின் முதல்கடலோடியான தமிழனுக்கு, போற்றுதலுக்குரிய கருவிகளாகக் கிடைத்தவை, கப்பல் வரையிலான நீர்வழிக் கலங்கள். இந்தநீர்வழிக்கலங்களால் கடற்கரை அமைந்த நாடுகளுக்கு எல்லாம் சாத்தனார்கள் என்கிற தமிழ்வணிகர்களால் பயணிக்க முடிந்தது. தமிழ்வணிகர்களோடு உலகினர் நடத்திய, நெடிய, தொடர் கலந்துரையாடலில், உலகினருக்கு, ஓர் எல்லையில், இருமெய்க் கோட்பாடு ஆன தமிழியலை ஆதரிக்க வேண்டியதும், இருமெய்க் கோட்பாடு ஆன தமிழியலை எதிர்க்க வேண்டியதும் ஆன இரண்டு கட்டாயங்கள் எழுந்தன. அன்று தொடங்கி இன்றுவரை உலகின் அறிவுலகம் தமிழியலை எதிர்க்கிற வகைக்கே கிறித்துவம், முகமதியம், பௌத்தம், சமணம், ஹிந்துத்துவம் ஆகிய பலமுனைகளில் பாடாற்றியும், பாடாற்றலுக்கான கொள்கைகளைக் கட்டமைத்தும் இயங்கி வருகின்றது. உலகம் எதிர்க்கும் தமிழியலை, தமிழினம் தற்காத்து இன்றுவரை வளர்ந்திருக்குமேயானால், உலகம்- தமிழியலைக் கற்றுத்தேர்ந்து, இரண்டாவதைப் புரிந்துகொள்கிற, இருமெய் கோட்பாடு என்கிற தமிழியலைக் கொண்டாடத் தொடங்கியிருக்கும். 'யாதும்ஊரே யாவரும் கேளிர்' என்கிற தமிழியல் கோட்பாட்டில் ஒட்டுமொத்த உலகமும் பயணிக்கத் தொடங்கியிருக்கும். ஆனால், ஆரியர் வரவுக்குப் பிந்தைய கடந்த 3500 ஆண்டுகளாகத் தமிழினம்- பிராமணிய ஆதரவுத் தளத்திலும், எதிர்ப்புத் தளத்திலுமாகவே இயங்கி வருகிறது. இதை மடைமாற்றி, தமிழினத்தைத் தமிழியலுக்கு ஆற்றுப்படுத்தும் நோக்கத்திற்கு, என்னோடு பலர் கைகோர்க்கும் நிலையில், அந்தவகைக்கு எழுதப்பட்ட கட்டுரைகளின் வரிசையில் ஒன்றாக, இந்த ஐந்திரக்காப்புக்குறி, கட்டுரையால், தமிழியலுக்குப் பேரளவாகப் பயன்விளைக்கமுடியும். பிள்ளையார்சுழி, ஓம் போன்ற மந்திரக் குறியீடுகளின் வரிசையில், கடவுள் என்பது தமிழ்ச்சொல் மட்டுமே என்று புரிந்து கொண்டு, கடவுள் மூலமாக நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்கிற ஐந்திர மாண்புகளைக் கொண்டாடும் வகைக்கு, தமிழ்முன்னோர் முன்னெடுத்த மந்திரக்குறியீடே இந்த ஐந்திரக்காப்புக்குறி, என்பதை அந்தக் குறியீட்டின் அமைப்பு முறையில் நம்மால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஐந்திணைக் கோயில் மூலமாக முன்னெடுக்கும் தமிழியல்கட்சிக்கு ஒரு கொடியை உருவாக்க முனைந்து, எனக்குக் கிடைத்தது, தமிழியல்கட்சிக்கு நான் உருவாக்கிய இந்த இணைப்பில் அமைந்த கட்டுரைப் படத்தில் இருக்கிற கொடி ஆகும். இந்தத் தமிழியல்கட்சிக் கொடி, தமிழியல் செய்திகளை மட்டும் உள்ளமைத்து புள்ளி புள்ளியாக உருவாக்கப்பட்டக் கொடி ஆகும். இந்தக் கொடியில், நிலம் நீர் தீ காற்று ஆகியவற்றை வட்டப்புள்ளிகளாகக் காட்டிய நிலையில், அவைகளுக்கு இயக்கம் இருப்பதை நிறுவ முடிகிறது. அவைகளுக்கு வெளியில் அமைந்ததாக விசும்பைக் காட்ட முனைந்தேனே அன்றி, நிலம் நீர் தீ காற்றிடம் இருந்து இயக்கம் பெற்று, அவற்றை முயக்குகிற விசும்புக்கு, 'இயக்கம்பெற்று இயக்கும்முயக்கம்' காட்டப்படவில்லை. கடவுள் அறிவுறுத்தலாக, ஒருவீட்டு வாயில் சுவரில் பதிக்கப்பட்டிருந்த ஓட்டில் வரையப்பட்டிருந்த ஸ்வஸ்திக்கை இன்று பார்க்க முடிந்தது. சிந்துவெளி எழுத்துக்களோடு, இந்த அடையாளம் இருப்பதையும் இந்த அடையாளத்திற்கு உலகம் புனைந்திருக்கிற மாறுபட்ட கதையாடல்களையும் நிறையவே படித்திருக்கிறேன். இந்;த அடையாளத்தில், சாத்தானோடு தொடர்புடையதாக உலகம் கருதும் ஒரேயொரு வடிவம் மட்டும், மற்ற அத்தனை வடிவங்களோடும் மாறுபட்டிருப்பதும் அதுமட்டுமே தமிழியல் அடிப்படையில் நாம் வடிவமைத்த கொடியோடு ஒத்துப்போவதும் நமக்கு அருமையானதொரு தெளிவுக்கு வழிஅமைத்தது. ஸ்வஸ்திக் என்று மட்டுமே உலகம் அறிந்திருக்கிற, சாத்தானோடு தொடர்புடையதாக உலகம் கருதும், தமிழ்முன்னோர் நிறுவியிருந்த ஐந்திரக்காப்புக்குறியில் நிலம் நீர் தீ காற்றைக் குறிக்கிற நான்கு புள்ளிகளும் தெற்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு என்கிற நான்கு திசைகளில் அமைக்கப்பட்டிருக்கின்றன. மற்ற அனைத்து குறியீடுகளிலும், இடுகுறியாக அமைக்கப்பட்ட நான்கு புள்ளிகள், திசை மூலைகளை அடையாளப் படுத்துகிறவைகளாக உள்ளன. தமிழியல் கட்சிக்கொடிக்கு, நாம் அமைக்காத விசும்புக்கான முயக்கத்தை, சாத்தானோடு தொடர்புடையதாக உலகம் கருதும், தமிழ்முன்னோர் நிறுவியிருந்த ஐந்திரக்காப்புக்குறி கொண்டுள்ளது. விசும்பின் முயக்கத்தையும் சுழல் இயக்க அடையாளமாகப் பதிவிட்டு- நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்கு இயக்கங்களையும் பதிவிட்டு- ஐந்திரத்தின் மாண்புகளைக் கொண்டாடும் நோக்கத்திற்கு தமிழ்முன்;;னோர் அமைத்த ஐந்திரக்காப்புக்குறியீடே ஸ்வஸ்திக் என்று உலகினர் கொண்டாடும் குறியீட்டிற்கு மூலம் என்று உறுதியாக நிறுவலாம். ஐந்திணைக் கோயில் வடிவமைத்த முன்னேற்றக் காப்பு மந்திரத்தை அன்றாடம் ஓதி இருப்பதோடு, இந்த ஐந்திரக்காப்புக்குறியீட்டையும் அன்றாடம் பார்த்திருங்கள் என்று மந்திரம் கற்பவர்களை அறிவுறுத்துகிறோம்.
1.கிழமை: வெள்ளிக்கிழமை
2.நாள்: 01
3.மாதம்: மாசி
4.தமிழ்த்தொடராண்டு: 5127
5.தமிழ்த்தொடர்நாள்: 1872619



