Show all

புதிய கட்சி- இரஜினியின் சாரம் இதுதான்! இந்தியாவில் இருந்து தமிழகத்தை தனிஅடையாளப்படுத்திக் காட்டும் திராவிட அரசியல் உத்தியைத் தகர்த்தல்

தமிழகத்தில் திமுக அதிமுகவைத் தாண்டி எத்தனை ஆயிரம் புதிய கட்சிகள் தோன்றினாலும், ஆட்சிக்குப் பக்கமாக வரஇயலவில்லை என்றால் அதற்குக் காரணம் தொடக்க கால திமுக கட்டமைத்த அரசியல் உத்திதான் காரணம். இந்தத் திராவிட அரசியல் உத்தியைத் தகர்த்தலையே தன் தன் அரசியல் கட்சியின் கொள்கையாக முன்வைக்கிறார் இரஜினி

30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இரஜினி தொடங்கும் புதிய கட்சியின் கொள்கை என்ன? 
1.தமிழை- தமிழக அரசின் நிருவாகத்தில் முழுமையாக அரியணை ஏற்றுவதா?
2.நீட் தேர்வை மறுத்து தமிழக கல்வி உரிமையை நிலைநாட்டுவதா?
3.கோயில்களில் நடுவண் அரசின் மற்றும் பார்ப்பனியர்களின் ஆக்கிரமிப்பை அகற்றி ‘ஹிந்து சமய அறநிலையத்துறையை’ ‘தமிழ்மெய்யியல் அறங்காப்புத் துறை’ என மாற்றியமைப்பதா?
4.தமிழக மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வாக இந்திரகாந்தியால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவு கொடையை விலக்கிக் கொள்வதா?
5.நடுவண் அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தடை விதித்து  முழுமையாக தமிழகத்தை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிப்பதா?
இப்படி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு தமிழகத்தை தற்காத்துக் கொள்ள வாய்ப்பான கொள்கைகள் எல்லாம் இரஜினிக்கு முதன்மையில்லையாம்.

திராவிட முன்னேற்றக்கழகம் கட்சியை தமிழகத்தில் நிலைநிறுத்த 1.கொள்கை, 2.கட்சிநிருவாகம் இரண்டையும் இரண்டு கண்களாக சிறப்பாக முன்னெடுத்து வந்தது. திமுகவிடமும், அதிலிருந்து கிளைத்து அதே பாணியில் கட்சியை முன்னெடுத்து வருகிற அதிமுகவிடமும் கட்சிக் கொள்கையில் எந்த மாற்றமும் வந்ததில்லை. அந்தக் கொள்கையை முன்னெடுப்பதில் நடுவண் அரசில் அமையும் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் ஹிந்தி மற்றும் ஹிந்தி-ஹிந்துத்துவா தலைமைகளைத் திருப்தி படுத்த தளர்ச்சியைக் காட்டும். 

அப்படி காங்கிரசிடம் திமுக தளர்ச்சியைக் காட்டிய சமயத்தில்தான் இலங்கையில் ஒன்னரை இலட்சம் தமிழர்களை அழித்தொழிக்க சிங்களவர்களுக்கு ஒத்துழைத்து சாதித்தது காங்கிரஸ். 

அப்படி பாஜகவிடம் அதிமுக தளர்ச்சியைக் காட்டுவதால்தாம், பாஜகவின் நீட், பாஜகவின் ஹைட்ரோ கார்பன், பாஜகவின் தொல்பொருள் துறையின் கீழ் தமிழகக் கோயில்கள், ஒரேநாடு ஒரே குடும்ப அடையாள அட்டை என்பனவெல்லாம் அரங்கேறி வருகின்றன.

நாம் தமிழர் கட்சி: திராவிட இயக்கங்கள் நடுவண் அரசில் அமையும் ‘ஹிந்தி காங்கிரஸ்’ மற்றும் ‘ஹிந்தி-ஹிந்துத்துவா பாஜக’ தலைமைகளுக்கு திமுக மற்றும் அதிமுக காட்டும் கொள்கை தளர்ச்சியைக் கடுமையாக சாடி களமாடி வருகிறது.

ஆனால் புதியதாகக் கட்சி தொடங்கவிருக்கிற இரஜினிக்கு: இந்தியாவில் இருந்து தமிழகத்தை தனிஅடையாளப்படுத்திக் காட்டும் திராவிட அரசியல் கட்சிகளின் கொள்கைகள் குறித்து எந்தக் கவலையும் கிடையாது. அவருக்கான கவலை ஆட்சியே இல்லாதிருந்தால்கூட திமுகவோ அதிமுகவோ தமிழகத்தில் நிலைநிறுத்தப்படுவதற்கு காரணமாக இருக்கிற நிருவாக உத்திதான் கவலை.

திமுகவிலும் சரி, அதிமுகவிலும் சரி தொண்டர்கள் நிலை நிற்பதற்கு: கொள்கை கட்டுமானமாக மட்டும் இல்லாமல், அதிகார அடுக்குகள் உள்ள பல்லாயிரக்கணக்கான கட்சிப் பதவிகளின் கட்டுமானமாகவும் இருக்கிறது. அதன் காரணமாகவே அந்தக் கட்சிகளுக்கு தமிழகத்தில் நிலையானதொரு வாக்கு வங்கி இருக்கிறது. இதுதான் இரஜினியின் கவலை.

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள, மின்மினி உணவகத்தில், நேற்று ரஜினி அளித்த பேட்டி: 
என் வருங்கால அரசியல் எப்படி இருக்கும்; நான் அரசியலுக்கு வந்தால், மக்களுக்கு எப்படி இருக்கும் என்பதை விளக்க, முண்னோட்டமாக, கட்சி தொடங்கும் முன், இதை சொல்லி விட்டால், அவர்களுக்கும் தெளிவு வரும். எனக்கும் அந்த அதிர்வுகள், எப்படி இருக்கும் என, தெரியும்; உங்களை புரிந்து கொள்ளவும் உதவும். அதற்காக தான், இந்த சந்திப்பு.

மக்கள் நடுவே, முதலில் மாற்றத்தை உருவாக்க வேண்டும். சிஸ்டம் சரி செய்யப்பட வேண்டும். அதை சரி செய்யாமல், மாற்றம் நடந்தால், மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல், சர்க்கரை பொங்கல் வைத்தால், எப்படி இருக்குமோ, அப்படி இருக்கும். முதலில், அரசியலில் மாற்றம் செய்ய வேண்டும். அதற்கு, சில திட்டங்களை வகுத்திருக்கிறேன் என்று மூன்று திட்டங்களைத் தெரிவித்துள்ளார் இரஜினிகாந்த்.

முதல் திட்டம்:-
இரண்டு மிகப்பெரிய கட்சிகளான, திமுக - அதிமுகவில், ‘பூத் கமிட்டி’ உறுப்பினர்கள் தவிர்த்து, 60 ஆயிரம் கட்சிப் பதவிகள் உள்ளன. தேர்தல் நேரத்தில் மட்டுமே, இப்பதவிகள் தேவை. தேர்தல் முடிந்த பின், இவ்வளவு அதிக பதவிகள் தேவையில்லை. இவர்கள் வெற்றி பெற்ற பின், ஆளும்கட்சி ஆட்கள் என்ற முறையில், ஒப்பந்தம் முதல் அனைத்திலும், எல்லா விதத்திலும் ஊழல், தப்பு நடக்கும்; மக்கள் பாதிக்கப்படுவர்.

இரண்டாவது திட்டம்:
சட்டமன்றத்தில் பெரும்பாலானவர்கள், 50 - 65 அகவைக்கு மேலானவர்கள்; 45க்கு கீழே கொஞ்சம் பேர் மட்டுமே உள்ளனர்; அவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். புதியவர்கள் வருவதே இல்லை; வந்தவர்களே வருகின்றனர். புதியவர்கள், இளைஞர்கள், அரசியலை சாக்கடை என, ஒதுங்கி இருக்கின்றனர். இளைஞர்களுக்கு, அவ்வளவு சீக்கிரம் பதவிகள் கிடைப்பதில்லை. அப்படி பதவி கிடைக்க வேண்டும் என்றால், அவர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மகனாகவோ அல்லது செல்வந்தனாகவோ இருக்க வேண்டும். என் கட்சியில், 50 அகவைக்கு கீழே உள்ள திறமையான, ஓரளவு படித்த, நல்ல பெயர் பெற்ற, தொகுதியில் கண்ணியமாக கருதப்படுபவர்களுக்கு மட்டுமே, 65 விழுக்காட்டு அளவுக்கு, இடம் தருவேன். வேறு கட்சியில் உள்ள நல்லவர்கள், திறமையானவர்களுக்கு, மீதி, 35 விழுக்காட்டு இடம் தருவேன். 

மூன்றாவது திட்டம்:
இந்தியாவில், தேசிய கட்சிகளை தவிர, எல்லா மாநிலத்திலும், கட்சிக்கும் அவர் தான் தலைவர்; ஆட்சிக்கும் அவர் தான் தலைவர். இப்படி இருக்கும் போது, தேர்தலில் வெற்றி பெற்று விட்டால், அவரை, ஐந்தாண்டுகளுக்கு மக்கள் ஒன்றும் கேட்க முடியாது. கட்சியில் கேட்டாலும், அவரை தூக்கி எறிந்து விடுவர். ஏன் என்றால், கட்சியிலும் அவர் தானே தலைவர்! எனவே, கட்சிக்கு, ஒரு தலைமை; ஆட்சிக்கு, ஒரு தலைமை அவசியம். கட்சி என்றால் என்ன் கொள்கைகள் தான் கட்சி.

கொள்கைகளை வைத்து, மக்களுக்கு வாக்குறுதி தருகிறோம். அதை நம்பி, மக்கள் ஓட்டு போடுகின்றனர். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மக்கள் வளர்ச்சிப் பணியில், அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவை உருவாக்கி, குழு பரிந்துரைகளை செயல்படுத்துவதை, கட்சி தலைமை உறுதி செய்யும். இதுவே, என் மூன்றாவது திட்டம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.