Show all

சென்னைன்னா சும்மாவா! கொரோனாவிற்கு போக்கு காட்ட பக்காவாக திட்டமிடும் சென்னை: பணியை வீட்டிலிருந்தே செய்யுங்கள்

கொரோனாவிற்கு போக்கு காட்ட இரட்டைப்படியாக (பக்காவாக) திட்டமிட்டிருக்கின்றன சென்னை நிறுவனங்கள். பணியாளர்கள் அலுவலகம் வர வேண்டாம்; பணியை வீட்டிலிருந்தே செய்யுங்கள்.

29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகம் முழுவதும் பல நாடுகள் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தத் திணறி வருகின்றன. பல நாடுகளில் மருத்துவ அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் அந்த நாடுகளில் உள்ள பள்ளிகள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் பல முன்னறிவிப்பின்றி மூடப்பட்டிருக்கின்றன.

இந்தியாவிலும் கொரோனா தொற்று தனது தாக்கத்தைத் தொடங்கியிருக்கிறது. தற்போது இந்தியா முழுவதிலும் 56 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்த வரை ஒரு கொரோனா நோயாளியும் குணம்பெற வைத்த நிலையில், தமிழக நலங்குத் துறை கைதட்டல் பெற்று வருகிறது.

இந்த நிலையில், கொரோனா பரவும் வாய்ப்பைத் தடுக்க பெருங்களத்தூரில் இயங்கிவரும் ஒரு மென்பொருள் நிறுவனம் கடந்த வியாழன் முதல் தன் பணியாளர்களை அலுவலகத்துக்கு வர வேண்டாம் எனக் கூறியிருக்கிறது. 

அன்று, மாலை பணியாளர்கள் பணி முடிந்து வீட்டுக்குச் சென்றவுடன், அனைவருக்கும் நிறுவனத் தரப்பிலிருந்து மின்அஞ்சல் மூலம் தகவல் வந்தடைந்தது. அந்த மின்;அஞ்சலில், அலுவலகத்தில் பணிபுரியும் சிலருக்குக் கொரோனா அறிகுறி தென்பட்டதன் காரணமாக, பணிக்காக இனி யாரும் அலுவலகத்துக்கு வர வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டது. மாறாக, வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு முன்னரே, விரும்பிய ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற நமது நிறுவனத்தால் வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது.

இப்போது இந்தச் சூழலில், நமது அலுவலகத்தில் சுமார் 5,000 பேர் வீட்டில் இருந்தே வேலைசெய்து வருகின்றனர். இருப்பினும், சில முதன்மை அதிகாரிகள் மட்டும் அலுவலகத்துக்கு வந்து தங்களது பணிகளைச் செய்து வருகின்றனர். மேலும், வருகைப் பதிவுக்காக வைத்திருக்கும் பயோ மெட்ரிக் அமைப்பும் நீக்கப்பட்டுவிட்டது. கொரோனா அறிகுறிகளுடன் தென்பட்ட சக பணியாளர்களுக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. என்று நிறுவனத்தால்; தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிறுவனத்திடமிருந்து எப்போது மறு அழைப்பு வருகிறதோ அப்போதுதான் அலுவலகத்தில் பணி, அதுவரை வீட்டிலிருந்தபடியேதான் வேலை என்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த முறையை பல நிறுவனங்களும் சென்னையில் தொடங்கிவிட்டதாகத் தெரியவருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.