12,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக அரசியல் களத்தில் குதிக்க ரஜினி முடிவு செய்து விட்டாலும் கூட, திடீரென புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகியிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அரசியலை அவர் ஈடுபாடாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்படி எடுத்திருந்தால் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்க மாட்டார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். ரஜினி தீவிர அரசியலில் குதிக்க அஞ்சுவதாகவும், தயங்குவதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அவரை பின்னாலிருந்து இயக்குவோரின் திருப்திக்காக மட்டுமே தற்போது அவர் ரசிகர்களைச் சந்திப்பது, நிர்வாகிகளை நியமிப்பது என செயல்படுகிறார். அவரது போக்கில் ஏனோ தானோ அதிகம் மிதமிஞ்சித் தெரிவதாகக் கருதும் வகையிலேயே அவரது மந்தமான செயல்பாடுகள் உள்ளதாகவும் விமர்சகர்கள் கூறுகிறார்கள். காலா, 2. ஆகிய இரு படங்களுடன் ரஜினி திரையுலகிற்கு வணக்கம் சொல்லி விட்டு அரசியலில் தீவிரமாக குதிப்பார் என கருதப்பட்டது. ரசிகர்களும் கூட அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் ரஜினி புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியிருப்பது ரசிகர்களுக்கே தர்மசங்கடமாகியுள்ளது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் நாய்பெற்ற தெங்கம் பழமாய் இழுத்து புதிய வரலாறு படைத்தவர் ரஜினி. இப்போது அரசியலுக்கு வரப் போவதாக அறிவித்தும் கூட பழைய மாதிரியே ஜவ்வு மிட்டாயாக இழுத்துக் கொண்டிருக்கிறார். கேட்டால் கட்டமைப்பு, நிர்வாகிகள் நியமனம் என்று ஏதேதோ சொல்கிறார். மனசே இல்லாமல் அரசியலுக்கு அவர் வந்துள்ளதாகவே கருதப்படுகிறது. ரஜினியைப் பொறுத்தவரை அரசியலை விட நடிப்பு எளிது என்ற மன நிலையில் இருப்பதாக சொல்கிறார்கள். பேசாமல் நடித்து விட்டுப் போய் விடலாமே என்ற எண்ணம்தான் அவரிடம் மேலோங்கியிருப்பதாக சொல்கிறார்கள். அரசியலை அவர் முழுமையாக இன்னும் மனதுக்குள் வாங்கிக் கொள்ளவில்லை என்றும் விமர்சகர்கள் கருதுகிறார்கள். ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை சீரியஸாக ஈடுபாடாக எடுத்திருந்தால் இப்படி காலம் தாழ்த்த மாட்டார். போர் வரட்டும் என்று அமர்ந்திருக்க மாட்டார். விறுவிறுப்பாக களத்தில் இறங்கியிருப்பார். மறுபக்கம் கமல் செய்து கொண்டிருப்பது அதுதான். அவர் எல்லாவற்றையும் படு வேகமாக திட்டமிட்டு மின்னல் வேகத்தில் களப் பணிகளில் இறங்கியிருப்பதை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். நேற்று ரஜினி செய்தியாளர்களிடம் பேசும்போது நிர்வாகிகளை சந்தித்தேன், பெயர் எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டேன் என்று கூறினார். அவர் எல்லா நிர்வாகிகளையும் எப்போது சந்தித்து, எப்போது எல்லாப் பெயர்களையெல்லாம் கேட்டுத் தெரிந்து எப்ப கட்சி ஆரம்பித்து என்ன செய்யப் போகிறார் என்பது பெரும் மலைப்பையே தருகிறது. உண்மையில் ரஜினி ரசிகர்கள்தான் பரிதாபமாக காட்சி தருகிறார்கள். அரசியலுக்கே வர மாட்டார் என்று நினைத்துக் கொண்டிருந்த கமல்ஹாசன் அதிரடியாக வந்ததோடு, கட்சியையும் தொடங்கி பல வேலைகளைப் புயல் வேகத்தில் பார்க்கத் தொடங்கி விட்டார். ஆனால் நாம் இத்தனை காலமாக காத்துக் கொண்டிருக்கிறோம். தலைவர் வர மாட்டேங்கிறாரே என்ற வேதனையில் அவர்கள் உள்ளனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,708
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



