Show all

பாஜகவின் ஹிந்துத்துவாவில் நமக்கான அதிகாரம் எங்கே! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி

ஹிந்துக்களுக்காகக் குரல் கொடுக்கிறோம் என்று தொண்டை வற்றச் கூக்குரல் எழுப்பும் பாஜகவினருக்கு இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வஞ்சிக்கப்பட்டு வரும் பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஹிந்துக்களாகத் தெரியவில்லையா? பாஜகவின் ஹிந்துத்துவாவில் நமக்கான அதிகாரம் எங்கே! என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்விகளை எழுப்பியுள்ளார். 

08,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: மக்களை ஏமாளிகளாக்க, ஹிந்துக்களுக்காகக் குரல் கொடுக்கிறோம் என்று பாஜக பீற்றிக் கொண்டு வருகிறது. இந்த மேலாதிக்க ஏமாற்றுத்தனம் தொடர்பாக மக்கள் பாஜகவின் நயவஞ்சகத்தில் வீழ்ந்துவிடக் கூடாது என்பதாக மு.க.ஸ்டாலின் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பாஜக அரசு நடுவண்அரசில் உருவானது முதல், அவர்கள் இரண்டு வேலைகளில் முதன்மைக் கவனம் செலுத்தி வருகிறார்கள். முதலாவதாக, தங்களது மதவாத சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் தர தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள்; தங்களுக்கு இருக்கும் பெரும்பான்மை என்னும் ஆயுதத்தைக் கொண்டு, சிலவற்றை நிறைவேற்றியும் இருக்கிறார்கள். 

இரண்டாவதாக, சமூகநீதியைச் சாய்த்திடும் செயலைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்துவதன் மூலமாக சமூகநீதிக்கு குந்தகம் ஏற்படுத்த முடியாது என்பதை அவர்கள் அறிவர். அதனால் வேறுபல வழிகளைக் கையாண்டு சமூகநீதியைச் சிதைக்கிறார்கள். அதில் மிக முதன்மையானது ‘நீட்’ தேர்வு. இந்தத் தேர்வின் மூலமாக பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, ஏழை - எளிய மக்களின் மருத்துவக் கல்விக் கனவுக்கு சாவு மணி அடித்து விட்டார்கள். 

அண்மையில் வெளிவந்துள்ள புள்ளிவிவரங்களின்படி, மருத்துவக் கல்வியில் சேர்ந்திருக்க வேண்டிய 27 விழுக்காடு (நடுவண் அரசின் இட ஒதுக்கீடு) பிற்படுத்தப்பட்ட மாணவர்களில், 12 விழுக்காட்டினருக்கே மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகள் மட்டுமல்ல, இனி ஒவ்வொரு ஆண்டும், பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்தைத் தடுக்க, நடுவண் பாஜக அரசு பாதை வகுத்துவிட்டது. 

இதில் நடந்திருக்கும் மாபெரும் அநியாயம் - அநீதி என்பது பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு மட்டுமல்ல, பட்டியலின சமுதாயத்தினர்க்கும் சேர்த்தே வஞ்சகம் இழைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 69 விழுக்காடு இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது; அதில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 விழுக்காடு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு 20 விழுக்காடு, பட்டியலினத்தவருக்கு 18 விழுக்காடு, பட்டியல் பழங்குடியினருக்கு ஒரு விழுக்காடு என உள்ளது. 

ஹிந்துக்களுக்காகக் குரல் கொடுக்கிறோம் என்று தொண்டை வற்ற ஓலமிடும் பாஜகவினருக்கு பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஹிந்துக்களாகத் தெரியவில்லையா? அவர்கள் என்ன ஹிந்துமத எதிரிகளா? ஹிந்துக்களுக்காக உழைப்பதாகச் சொல்லிக் கொள்வது உண்மையாக இருந்தால், பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி, அவர்களுக்கு உரிய இடங்களை கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தலைமைஅமைச்சரும், நடுவண் பாஜக அரசும் வழங்க வேண்டும். 

தமிழ்நாடு சமூகநீதியால் பண்பட்ட மண். இன்றிலிருந்து 98 ஆண்டுகளுக்கு முன், வகுப்புரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்த ஆட்சி திமுகவின் மூலவேர்க் கட்சியான நீதிக்கட்சியின் ஆட்சி. அந்த சமூகநீதித் தத்துவத்தில் எந்த அரசு வந்தாலும், எத்தகைய பெரும்பான்மை இருந்தாலும், கை வைக்க முடியாத வகையில், கண்ணை இமை காப்பதுபோல் காத்தும், 69 விழுக்காடுவரை வளர்த்தும் வந்துள்ளோம். 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக்கட்சிகள், தோழமைக் கட்சிகள், சமூகநீதித் தத்துவத்தில் ஆர்வம் உள்ள அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் அனைவரையும் ஒன்றுசேர்த்து ஆலோசனை செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்குவோம். மக்கள் மன்றத்தில் நாம் எழுப்பும் குரல், நாடாளுமன்றத்திலும் எதிரொலித்து பேரதிர்வுகளை ஏற்படுத்துவதாக அமையும். 

இந்த நாட்டின் மக்கள்தொகையில் பெரும்பான்மையாக உள்ள மக்களை (அவர்களின் கணக்குப்படி சொல்வதானால் ஹிந்து மக்களை) படிக்க விடாமல், முன்னேற விடாமல், தொழில்முனைவோருக்கும், நிருவாகத்தள வேலைகளுக்கும் தகுதிப்படுத்தாமல், மக்களை கூலிவேலைகளுக்கான நாடோடிகளாக்குவதில் கவனமாக இருக்கும் நடுவண் பாஜக அரசுக்கு பாடம் கற்பிப்போம். 

சமூகத்தில் உட்பூசல், இடஒதுக்கீடு பறிபோகும் பாஜகவின் முன்னெடுப்புகளில் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு எப்போதும் போல் அடிமை மனப்பான்மையுடன் அதனைத் தாரைவார்த்துவிடாமல், பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரையும் திராவிடம் என்ற பெயரையும் தாங்கி நிற்பதை நினைத்தாவது கொள்கைக்காக குரல் கொடுக்க வேண்டும். சட்டநீதிக்கு மேலானது சமூகநீதி; அதைக் காப்பது கட்டாயம். எப்போதெல்லாம் இடஒதுக்கீட்டைப் பறிக்கிறார்களோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் சட்டவிரோத செயல்களின்மூலம், சமூகத்தில் உட்பூசல்களை ஏற்படுத்துவார்கள். 

கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மக்கள், பட்டியலின மக்கள் தங்களது கல்வி உரிமைக்காகவும், தொழில்முனைவோர், நிருவாகத்தள வேலைகளுக்கான உரிமைகளுக்கும் உறுதியுடன் போராட முன்வர வேண்டும் என்று அறைகூவி அழைக்கிறேன். 

கல்விக்கான - தொழில்முனைவோர், நிருவாகத்தள வேலைகளுக்கான உரிமைகள் மட்டுமல்ல- அதிகாரத்தை அடைவதற்கான உரிமை- அதிகாரத்தில் பங்கேற்பதற்கான உரிமை- அரசியல் சட்டம் நமக்குக் கொடுத்த உரிமை- பாஜக அரசால் தட்டிப் பறிக்கப்படும் உரிமை- அந்த உரிமைகள் அனைத்தையும் மீட்க ஒன்றிணைவோம் வாரீர் என்று மீண்டும் அழைக்கிறேன் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார் முக ஸ்டாலின் அவர்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.