சசிகலா, நடராசன், திவாகரன் மூவருக்கும் இந்த ஆட்சியைக்
காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறையைவிட, ஜார்ஜ், சேஷசாயி, சங்கர் போன்ற காவல் துறை அதிகாரிகளைக்
காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்புதான் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. ‘இதுதான்டா போலீஸ்’ ராஜசேகர் போல ஜார்ஜும், ‘சாமி’
விக்ரம் போல சேஷசாயியும்,
‘சிங்கம்’ சூர்யா
போல சங்கரும் பேட்டி மேல் பேட்டி கொடுப்பதைப் பார்த்தால், அரசாங்கமே இவர்களைக் காப்பாற்ற
இயங்குவதுபோலத் தெரிகிறது. ஜெயலலிதா வளர்த்துக்
கொடுத்த கட்சியையும், கைப்பற்றிக் கொடுத்த ஆட்சியையும் இவர்கள் வைத்துக் காப்பாற்ற
மாட்டார்கள் என்பதற்கு, பட்டவர்த்தனமான உதாரணம் ஆகிவிட்டது சென்னை கடற்கரையில் நடந்த
காளைப் புரட்சியைக் காக்கிக் களங்கமாக ஆக்கிய நிகழ்ச்சி. தமிழக ஆளும் தலைமையும், ஆளும் கட்சியின் தலைமையும்
நடுவண் அரசுக்;குப் பணிந்து ஏதாவது செய்ய வேண்டுமே என்கிற குழப்பத்தில் தாம் லத்தி
ஆட்சியைக் கூச்சமே இல்லாமல் நடத்தியது. எல்லா அராஜகங்களையும் செய்துவிட்டு, அதற்குப்
பொய்யான ஆதாரங்களைப் புதிது புதிதாக அடுக்குகிறது. ஒரு நாயைக் கொல்வதாக இருந்தாலும், அதற்கு பைத்தியம்
இருப்பதை நிரூபிக்க வேண்டும் என்பது பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே பின்பற்றும் நெறிமுறையாக
இருக்கிறது. இன்று எந்த மனிதனைக் கொல்வதற்கும் இந்த நெறிமுறை அவசியம் இல்லை. சிட்டுக்குருவிகளைப்போல்
இதே சென்னை கடற்கரையில் பலரைச் சுட்டுக் கொன்ற ‘மீசை’ காவல்துறை அதிகாரிதான் ஒருமுறை சொன்னாராம்,
‘நான் யாரையாவது சுட வேண்டும் என முடிவுசெய்தால்,
சுட மாட்டேன். முதலில் என் கையை வெட்டிக்கொள்வேன். அதன் பிறகுதான் சுடுவேன்’
என்று. ‘என்னை வெட்டிவிட்டான். அதனால் சுட்டேன்!’
என்பது, அவர் தமிழ்நாடு காவல் துறைக்குக் காட்டிச் சென்ற வழிமுறை. சல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவாக ஆறு நாட்கள்
அமைதியாக நடந்தது சென்னை கடற்கரைப் போராட்டம். ஏழாவது நாள்- சல்லிக்கட்டுக்;கு
ஆதரவாக அவசரசட்டம் கொண்டு வருவதற்கு முன்னால், தமிழர் எப்போதும்
ஒருங்கிணைந்து விடக்கூடாது என்கிற என்கிற நடுவண் அரசின் நிரந்தரக் கோட்பாட்டிற்கு ஆதரவாக,
சல்லிக்கட்டு விளையாட்டுக்கு
ஆதரவாக ஆறு நாட்கள் அமைதியாக நடந்த போராட்டத்தின் மீது ஏவிவிடப்பட்டது தாம் காவல் துறை.
அப்போதே ‘ஏழரை’ விதைக்கப்பட்டுவிட்டது. அரசாங்கம், ஓர்
அவசரச் சட்டம் கொண்டுவருகிறது. எனவே, ஜல்லிக்கட்டு நடத்தத் தடை இல்லை. உங்களது நோக்கம்
நிறைவேறிவிட்டது. நீங்கள் கலைந்து செல்லலாம் என்று காவல் துறை அதிகாரி பாலகிருஷ்ணன்
சொன்னபோது, ‘எங்களது வழக்குரைஞரை அழைத்துள்ளோம். அவர்
வந்ததும் அவசரச் சட்டத்தைப் படித்துப் பார்த்துவிட்டுக் கலைந்துவிடுகிறோம்’
என்றுதான் இளைஞர்கள் சொன்னார்கள்.
நான்கு மணி நேரம் அவகாசம் கேட்டார்கள். தரவில்லை. இரண்டு மணி நேரம் அவகாசம் கேட்டார்கள்
தரவில்லை. ஒரு மணி நேரம் கேட்டார்கள். தருகிறோமா... இல்லையா எனச் சொல்லாமலேயே பாலகிருஷ்ணன்
போனார். எதையுமே சொல்லாமல் பாலகிருஷ்ணனை அழைத்துச் சென்றார்
சங்கர். இதை, நேரலையில் லட்சக்கணக்கான மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். போராட்டத்தில்
ஈடுபட்டிருந்த ஒவ்வொருவரையும் இழுத்துப் போடத் தொடங்கியது காவல் துறை. ‘சார்... குழந்தைங்க
இருக்காங்க, பெண்கள் இருக்காங்க. நாங்க கலைஞ்சுடுறோம் சார்’
என்று அப்போதும் குரல் வந்தது.
காவல் துறை அதிகாரிகள், அதைக் காதில் வாங்கவே இல்லை. பலப்பிரயோகத்தைப் பயன்படுத்தி,
ஒவ்வோர் இளைஞனின் கையையும் ஒடித்து, பூட்ஸ் கால்களால் மிதித்து, பெண்களை நசுக்கி, காட்டுமிராண்டிகளாக
நடந்து கொண்டதைப் பார்த்தப் பிறகுதான் பலரும் கலைய மாட்டோம்’
என மறுபடியும் உட்கார்ந்தார்கள். ‘ஒரு மணி நேரம் அவகாசம் கேட்டார்கள். அதன்
பிறகும் கலையவில்லை’ என்கிறார் சென்னை காவல் துறை ஆணையாளர் ஜார்ஜ்.
ஒரு மணி நேரம் அவர்களுக்கு அவகாசம் தரப்பட வில்லை. சங்கரும் பாலகிருஷ்ணனும் கூட்டத்தை
விட்டு வெளியேறியதும் கூட்டத்துக்குள் வேதாளம் புகுந்தது. இருந்த இடத்திலேயே சங்கிலிபோல்
கைகோத்துக்கொண்டு சிலர் படுத்துக் கொண்டார்கள். பாதிப் பேர், கலைந்து ஓட ஆரம்பித்தார்கள். ஓடியவர்களை
விரட்டியது காவல்துறை. இவர்கள்தான் மீனவக் குப்பத்துக்குள் அடைக்கலமாக ஓடியவர்கள்.
சிலர், கடலை நோக்கி ஓடினார்கள். தண்ணீரை நோக்கி பல நூறு பேர் ஓடிவருவதைப் பார்த்து,
மீனவர்கள் அந்த இடத்தில் சூழ்ந்தார்கள். போராட்டக் காரர்களுடன் மீனவர்கள் கைகோத்தது,
அந்த இடத்தில்தான். காவல் துறையால் போராட்டக்காரர்களை அடிக்க முடியாமல் போனதற்குக்
காரணம் மீனவர்கள் அரண் அமைத்து நின்றதுதான். இந்தக் கோபத்தில்தான் குப்பத்துக்குள்
காவல்துதைற கல் வீசுகிறது. அவர்கள் திருப்பி கல் வீசுகிறார்கள். அகிம்சைப் போராட்டத்தை
அராஜகப் போராட்டமாக மாற்றும் வேலை, இரண்டு மணி நேரத்தில் நடந்து முடிந்துவிடுகிறது. ‘சுடுவதற்கு முன் கையை வெட்டிக் கொள்வேன்!’ என்ற
விதிப்படி காவல்துறையினரே ஆங்காங்கே கொளுத்திக்கொண்டார்கள். நின்றுகொண்டிருந்த ஆட்டோவுக்குத் தீ வைக்கிறார்
காக்கிச் சீருடை அணிந்த சென்னை காவல் துறை நண்பர். குடிசைக்குத் தீ வைத்துவிட்டு, கொக்கோ
விளையாட்டில் ஓடுவதைப்போல் ஓடுகிறார் சென்னை காவல் துறை தோழி. இதுபற்றி கேட்டால் உடனே ‘மார்ஃபிங்’
என்கிறார் ஜார்ஜ். மதியம் நடந்தது
சம்பவம். இரவுக்குள் ‘மார்ஃபிங்’ எனக் கண்டுபிடித்து விட்டார். கூடுதல் ஆணையர்கள்
சங்கர், சேஷசாயிக்கு மனச்சாட்சி உறுத்துகிறதுபோல. ‘அந்தக் காட்சியைத் திரும்பத் திரும்பக்
காட்டுகிறார்கள். அந்த காவலர் மீது நடவடிக்கை எடுப்போம். ஆணையர் நடவடிக்கை எடுப்பார்’
என்று சொல்லியிருக்கிறார்கள்.
இதைச் சொல்வதற்கு வெட்கமாக இல்லையா? தீயை முதலில் மூட்டிய சமூக விரோதிகள் யாரெனத் தெரிகிறதா? ‘இரண்டு காவலரை மட்டும் வைத்து ஒட்டுமொத்த காவலரையும்
மதிப்பிடக் கூடாது’ என்று திருவாய் அருள்கிறார் சேஷசாயி. உண்மைதான்.
இது போராட்டம் நடத்தி யவர்களுக்கும் பொருந்தாதா? யாரோ சிலர், சட்டம் மீறிய முழக்கங்களை
எழுப்பியிருக்கலாம். அதற்காக மொத்தக் கூட்டமும் தேச விரோதிகள், சமூக விரோதிகள் ஆகிவிடுவார்களா? பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் பன்னீர்செல்வம்,
சசிகலா ஆகியோர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள். சல்லிக்கட்டு விவகாரத்தை இந்த மூன்று
பேரும் சரியாகக் கையாளவில்லை. தமிழ்நாடு முழுக்க லட்சக்கணக்கானவர்கள் உட்கார்ந்த பிறகுதான்
இந்த மூன்று பேருக்கும் சொரணை வந்தது. அந்தக் கோபத்தை வெளிக்காட்ட மாட்டார்களா? நடுவண்-மாநில அரசுகளுக்கும், உளவுத் துறைக்கும்,
சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றும் காவல் துறைக்கும் இது என்ன மாதிரியான கூட்டம் என்றே
தெரியவில்லை. கடைசி வரை அது புரியவே இல்லை. சல்லிக்கட்டுக்குத் தடை என்றதும், தமிழர் விளையாட்டுக்குத்
தடையா? என்றவர்கள் முதலில் அணி சேர்ந்தார்கள். ‘நம்முடைய கலாசாரம் அல்லவா?’ என்று சிலர்
வந்தார்கள். ‘இதற்குத் தடைபோட இவர்கள் யார்?’ என்று சிலர் வந்தார்கள். பெரியாரிசம்,
மார்க்ஸியம், தமிழ்த் தேசியம், பற்றிப் படிக்கக்கூடியவர்கள் வந்தார்கள். சிறு சிறு
அமைப்புகள், இவற்றோடு இணைந்தன. ‘நாட்டுக்காக நாம் ஏதாவது செய்ய வேண்டாமா?’ என்று சிலர்
வந்தார்கள். ‘நானும் தமிழன்டா’ எனக் காட்டிக்கொள்ள சிலர் வந்தார்கள். பொங்கலை, இந்து பண்டிகையாக சிலர் பார்த்தார்கள்.
பொங்கலை, தமிழர் திருநாளாக இஸ்லாமியர்கள் சிலர் பார்த்தார்கள். விஷ்ணு புராணத்தில்
ஏழு காளைகளை அடக்கித்தான் ருக்மணியைத் திருமணம் செய்தார் கிருஷ்ணர் என வைஷ்ணவர்கள்
வந்தார்கள். திருவான்மியூர் பக்கத்து கோயில் ஐயர் ஒருவர், தான் வர முடியவில்லை என தனது
மகன்களை அனுப்பி வைத்தார். விவசாயத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும். மழை
இல்லை, வறட்சி என வேதனைப்படுபவர்கள் வந்தார்கள். மத்திய-மாநில அரசுகளுக்கு எதிரான சிந்தனை
உடையவர்கள் வந்தார்கள். இந்தப் போராட்டக் களத்துக்குப் போகவில்லை என்றால், தமிழினத்
துரோகி எனச் சொல்லி விடுவார்களோ எனப் பயந்த பல அமைப்பினர், அவசர அவசரமாக வந்தார்கள்.
கடற்கரை என்பதால் காற்று வாங்க வந்தவர்கள், காதல் செய்ய வந்தவர்கள் வேடிக்கை பார்த்தனர். சிறு திடலாக இருந்தால் இறுக்கமாக இருந்திருக்கும்.
பரந்துபட்ட இடம். கார் நிறுத்தம் பிரச்னை இல்லை. எனவே, அது சுற்றுலாத் தளம் ஆனது. வெளியூரில்
இருந்து பேருந்து எடுத்து இங்கு வந்தார்கள். வெளியூர்க்காரர்கள், சென்னையில் இருப்பவர்களை
‘மெரினாவுக்குப் போகலையா?’ எனக் கேட்பதை வழக்கமாக்கினார்கள். மாதம் ஒன்றரை லட்சம் சம்பளம் வாங்குபவர், அங்கு
வந்து குப்பைகளை அள்ளிக்கொண்டிருந்தார். 70 லட்சம் கொடுத்து மருத்துவக் கல்லூரியில்
சேர்ந்திருக்கும் ஒரு பெண், தனது தோழிகளுடன் வந்து அங்கு முதலுதவி செய்து கொண்டிருந்தார்.
அரசு வாகனமான ‘அ’ பொறிக்கப்பட்ட வாகனம் வருகிறது. காவல்துறையினர்
வழி அமைத்துத் தருகிறார்கள், ‘ஏதோ அதிகாரி வருகிறார்’ என்று. நான்கு பையன்கள் கறுப்புச் சட்டையுடன்
இறங்கி, கூட்டத்தில் போய் உட்காருகிறார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம். எதிரிகளுக்கு
எரிச்சல் ஏற்படுத்தியதே இதுதான். தமிழார்கள் எதன்
பொருட்டும் கூட்டம் சேர்ந்தால், அவர்களுக்குப் பிடிக்காது. ‘இன்னொரு முறை இப்படி இவர்கள்
கூடிவிடக் கூடாது’ என்பதை உணர்த்த காவல்துறை ஏவிவிடப்பட்டது.
‘கூட்டத்தோடு சேர்ந்தால் அடி விழும்’ என்ற பயத்தை ஏற்படுத்தினார்கள். ‘புதிதாக
யாராவது போன் செய்து தோழர் ‘எனப் பேசினால், பேச வேண்டாம்’
என நல்ல பிள்ளையாக காவல் துறை
அதிகாரி சொல்வதற்குக் காரணம் இதுதான். முகநூல், புலனம் மூலமாக செய்திகள், போராட்டக்
களங்கள் உருவாவதை இவர்களால் தடுக்க முடியவில்லை. நாளிதழ்களில் விளம்பரம் காட்டியும்,
தொலைக்காட்சி ஊடகங்களை கேபிள் ஆசை காட்டியும் மிரட்டலாம். ஆனால், முகநூல் புலனம் ஆகியவற்றுக்கு
அவனவன் முதலாளி. என்ன செய்ய முடியும்? அடுத்த பத்து ஆண்டுகளுக்கு எவனும் மெரினா பக்கம்
வர மாட்டான்’ என்று ஒரு காவல்துறை அதிகாரி சொன்னாராம்.
காவல்துறைமூலம் உணர்த்த விரும்பியது இதுதான். சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பக்கம் போராட்டம்
நடந்ததால், அதிகமான இஸ்லாமிய மக்கள் வந்தார்கள். அதற்காக இதை தேச விரோதிகள் என் அடையாளம்
காட்டுமானால்... கடற்கரையில் போராட்டம் நடந்ததால், அதிகமான மீனவர்கள்
பங்கெடுத்தார்கள். அதற்காக, இதை சமூக விரோதிகள் என அடையாளம் காட்டுமானால்... இந்திய மக்களை இதைவிட யாரும் கேவலப்படுத்த முடியாது.
குறிப்பிட்ட சமூக மக்களை தேச விரோதிகள், சமூக விரோதிகள் எனச் சொல்லும் யாரையும் பொதுவானவர்களாக
எப்படி மதிப்பிட முடியும்? இந்த மொத்தக் கலவரத்துக்கும் முதலமைச்சர் பன்னீர்செல்வமும்
காவல் துறையும் காட்டும் முதல் ஆதாரம், ‘ஒசாமா பின்லேடன் படத்தை, கூட்டத்தில் எடுத்து
வந்தார்கள்’ என்பது. அப்படி ஒரு காட்சி இந்தப் போராட்டத்தில்
நடக்கவே இல்லை. ‘ஒசாமா பின்லேடன் படத்தை எனது கட்சிக்காரர்கள் எடுத்து வந்தது, பி.ஜே.பி
அலுவலகத்துக்கு எதிராக தாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப் போனபோது. அப்போதே அவர்களைக் கண்டித்து,
படத்தைக் கிழிக்கச் சொன்னேன். அந்தப் படத்தை மெரினாவில் நடந்ததாகக் காட்டுகிறார்கள்’
என்று ‘தடா’
ரஹீம் சொல்கிறார். இந்த ஆதாரத்தை
காவல் துறையின் மேலிடம் வரை அவர் சொல்லிவிட்டார். இதன் பிறகும் அந்தப் படத்தை வைத்துக்கொண்டு
பேசுவது உள்நோக்கம்கொண்டது அல்லவா? பன்னீருக்கும்,
சசிகலாவுக்கும், நடராசனுக்கும், திவாகரனுக்கும் அரசியல்தான் தொழில். ஒரே ஒரு பொய்யால்
ஓர் இனத்தையே, ஒரு போராட்டத்தையே தேச விரோத, நாசக்காரச் சக்திகளின் கைவேலையாகச் சித்திரிக்கும்
புதைகுழிக்குள் அ.தி.மு.க அரசு அழுத்திக்கொண்டு இருக்கிறது. ‘கடல் மேல் பிறக்கவைத்தான்...’
பாடல் மூலமாக, கடலில் பிறந்த கட்சி நடத்தும் ஆட்சியில், மீனவனைச் சமூக விரோதி எனச்
சொல்லி அடிப்பது பாவம் அல்லவா? தமிழ்நாட்டில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டு
அரசு யாருக்;;;கு தலையாட்டி பொம்மையாக இருக்கிறது. பொம்மை, காவல்துறை சீருடை அணிந்திருப்பது
தாம் பயமாக இருக்கிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



